பிரான்ஸ் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இலையுதிர் காலப்பகுதியில் நான்காவது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l'Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'டெல்ரா' போன்ற புதிய வைரஸ் கிருமிகளின் பரவலையும், போதியளவு சனத்தொகையினருக்குத் தடுப்பூசி இன்னமும் ஏற்றி முடிக்கப்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொண்டு நிலைமையை மதிப்பீடு செய்துள்ளது பஸ்தர் நிறுவனம். நான்காவது வைரஸ் அலையைத் தடுப்பது தடுப்பூசியிலேயே தங்கி உள்ளது என்பதை அதன் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.
சிறுவர்கள் மற்றும் வளர்ந்த பிள்ளைக ளில் கணிசமானோருக்குத் தடுப்பூசி ஏற்றி முடிக்கின்ற இலக்கைக் கோடை விடுமுறை காலப்பகுதிக்குள் எட்டாது விட்டால் எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள் கல்லூரிகள் போன்றன ஆரம்பமாகின்ற போது எந்தவித இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகளும் பேணப்படாமல் விடப்பட்டால் வரும் இலையுதிர் காலப்பகுதியில் தொற்றுக்கள் உச்சமாக உயர்ந்து மருத்துவமனைகள் மீது மற்றொரு முறை அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும் என பஸ்தர் நிறுவனத்தின் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
12 முதல் 17 வயதுடையோரில் 30 வீதமானோருக்கும் - 18முதல் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 70 வீதமானோருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 90 வீதமானோருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டால் மட்டுமே அடுத்தவைரஸ் தொற்றலையில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும் என்று அறிவியலாளர்கள் எதிர்வுகூறி உள்ளனர்.
தடுப்பூசி ஏற்றாத ஒருவர் வைரஸைப் பரப்புகின்ற வீதம் ஊசி ஏற்றியவரை விட 12 மடங்கு அதிகம் என்று அந்த நிறுவன அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாட்டில் நாளாந்தத் தொற்றாளர்களில் டெல்ரா வைரஸால் பீடிக்கப்படுவோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாரிஸ் நகரை உள்ளடக்கிய பிரான்ஸ் பிராந்தியத்தில் அது 21.4% வீதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெளி இடங்களில் மாஸ்க் அணிவது உட்பட முக்கியமான சுகாதாரக் கட்டுப் பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு நாளாந்த வாழ்க்கை ஒருவிதமான வழமை நிலைக்குத் திரும்பி உள்ளது. ஆனால் தடுப்பூசி ஏற்றும் பணிகளில் சமீப நாட்களாக மந்த நிலை தோன்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
Reviewed by Editor
on
June 29, 2021
Rating:
