சேதன பசளை உற்பத்தியில் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னிலையில் செயற்பட்டு வருகிறது - மாநகர முதல்வர்

(றிஸ்வான் சாலிஹு)

கிழக்கு மாகாணத்தில் சேதன பசளை உற்பத்தியிலும், அது குறித்து பிராந்திய விவசாயிகளை ஊக்குவிப்பதிலும் அக்கரைப்பற்று மாநகர சபை கடந்த பத்து வருடங்களாக செயற்பட்டு வருகிறது என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்தார்.

"காலநிலை மாற்றத்திற்கு நிலைபேறான தீர்வுகளுடனான பசுமையான சமூக பொருளாதார வடிவமைப்பை நோக்கி" எனும் எண்ணக்கருவில் இரசாயனங்களின் பாவனைகளின்றிய விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளல் தொடர்பான துறைசார் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (25) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி,அக்கரைப்பற்று பிரதேச சபை கௌரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.தமீம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், ஓய்வு பெற்ற மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.பீ.இக்பால், மாகாண விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விவசாய போதனாசிரியர்,வதிவிட திட்டப் பணிப்பாளர், அக்கரைப்பற்று கமநல சேவை உத்தோயோகத்தர்கள், அக்கரைப்பற்று விவசாய அமைப்புகளின் தலைவர், ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தினர், அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் பிரிவு மற்றும் கிராம சேவகர்கள்,சமுர்த்தி தலைமைப்பீட உத்தியோகத்தர்கள், சேதன பசளை உற்பத்தியாளர்கள், விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி முன்மொழிந்துள்ள தூர நோக்குமிக்க காத்திரமான இத்திட்டம் வரவேற்கப்பட வேண்டியதாகும். 

கிழக்கு மாகாணத்தில் சேதன பசளை உற்பத்தியிலும், அது குறித்து பிராந்திய விவசாயிகளை ஊக்குவிப்பதிலும் அக்கரைப்பற்று மாநகர சபை கடந்த பத்து வருடங்களாக செயற்பட்டு வருவதையும்முதல்வர் அஹமட் ஸகி இங்கு நினைவு கூர்ந்தார்.

மேலும், எமது எதிர்கால சந்ததியினர்கள் நஞ்சற்ற ஆரோக்கியமான விவசாய உணவு கலாசாரத்தை நுகர்வதிலும், அதனை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவத்திலும் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கலந்துரையாடலில் பிரசன்னமாகி இருந்த துறைசார் அதிகாரிகளுக்கு மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.











சேதன பசளை உற்பத்தியில் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னிலையில் செயற்பட்டு வருகிறது - மாநகர முதல்வர் சேதன பசளை உற்பத்தியில் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னிலையில் செயற்பட்டு வருகிறது - மாநகர முதல்வர் Reviewed by Editor on June 25, 2021 Rating: 5