(ஏ.எல்.றியாஸ்)
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் திலக் ராஜபக்ஷ புதன்கிழமை (30) பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
வைத்தியசாலைக்கு நட்பு ரீதியான விஜயத்தினை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் உடன் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், தற்போது வைத்தியசாலையில் நிலவும் பற்றாக்குறைகள், தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் அது தொடர்பான முன் ஆயத்த செயற்பாடுகள், வைத்தியசாலையின் கொரோனா தொடர்பான நிர்வாகக் கட்டமைப்புக்கள் குறித்தும், கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது வினவினார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு, தன்னாலான உதவிகளை செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இக்கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருடனான நட்பின் அடிப்படையிலே பாராளுமன்ற உறுப்பினர் இந்த விஜயத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
