100 நாட்கள் கடந்தும் றிஷாட் எம்.பியை தடுத்து வைத்திருப்பது எமக்கு அதிருப்தி அளிக்கிறது - அதாஉல்லா அஹமட் ஸகி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியூதீன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது போல முஸ்லிம் தலைவர்கள், அறிஞர்கள் அதிகாரத்தின் பிடியில் துன்புறுத்தப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் தலைமையில், இன்று (05) வியாழக்கிழமை மாநகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது சிறப்புரை நிகழ்த்திய கௌரவ முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு அவர் உரை நிகழ்த்துகையில்,
றிஷாத் பதியூதீன் குடும்பத்தார் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அலசி ஆராய்கின்ற போது அரசியல், கட்சி,கொள்கைகளுக்கு அப்பால் எமக்கு மன வேதனை ஏற்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்ட சபை எனும் அடிப்படையில், எமது உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சார்பாக அரசாங்கத்தை வேண்டிக் கொள்வது, முன்னாள் அமைச்சர் றிஷாத் மீது குற்றங்கள் இருப்பின் உரிய விசாரணைகள் மூலம் அதனை நிரூபித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அப்படி அல்லாமல் ஒரு மக்கள் பிரதிநிதியை 100 நாட்கள் கடந்தும் தடுத்து வைத்திருப்பது அதிருப்தி அளிக்கிறது. இவ்விடயம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசிற்கு நாம் கோரிக்கை விடுகின்றோம்.
மேலும், எமது உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பி வந்த கருத்தினை பகிர்ந்து கொண்ட காரைதீவு தவிசாளர் மீது எமது அதிருப்தியை தெரிவிக்கும் அதே வேளை, இவ்விடயத்தை வைத்து இனங்களுக்கிடையில் பிளவுகளை,பூசல்களை உருவாக்க நினைக்கும் கீழ்த்தர அரசியல் நோக்கங்களும் இனம் காணப்பட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பெறுமானம் மிக்க இச்சபை ஊடாக தெரியப்படுத்துகிறேன்
உலகத்தின் உன்னத மனிதப் புனிதர் முஹம்மது றசூல் (ஸல்) அவர்களின் கண்ணியத்தில் ஒரு சிறு அணுவளவேனும் இது போன்ற அரை வேக்காட்டு பதிவுகளால் குறைந்து விடப் போவதில்லை எனவும் கௌரவ மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி மேலும் அங்கு கருத்து தெரிவித்தார்.
Reviewed by Editor
on
August 05, 2021
Rating:

