விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் விஜயம்

(றிஸ்வான் சாலிஹு)

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் தேசிய மட்டத்தில் சேதன உரம் உற்பத்தி செய்யும் இடங்களை மேற்பார்வையிடுவதற்காக விவசாய திணைக்களத்தினதும்,விவசாய அமைச்சினதும் உயர் அதிகாரிகள் குழு  வெள்ளிக்கிழமை (27) இறக்காமம் விவசாய விரிவாக்கல் நிலையத்திற்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை பகுதிக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி உதித் ஜயசிங்க மற்றும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டீ சில்வா தலைமையிலான உயர் மட்ட குழுவினரே கள விஜயத்தை மேற்கொண்டு சேதன உரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டனர்.

"நஞ்சற்ற இயற்கை உரத்தை பாவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க கிராம மட்டத்திலுள்ள அனைவரும் கைகொடுக்க வேண்டும்" எனவும்,  இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அமைச்சின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று தருவதாகவும் இங்கு வருகை தந்த விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

"ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பல விவசாயிகளும் அதே போன்று தனியார் நிறுவனங்களும் முன்வந்திருப்பது மகிழ்ச்சிகரமான விடயமாகும்"

அசாதாரண சூழ்நிலையிலும் விவசாயிகள் சேதன உரத் தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளதை அவர் பாராட்டியும் நன்றி தெரிவித்தார்.

இக்கள விஜயத்தில்  மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ. அஹமட் நஸீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், விவசாய போதனாசிரியர் எஸ்.ஏ.அஷ்ஹர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.




விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் விஜயம் விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் விஜயம் Reviewed by Editor on August 28, 2021 Rating: 5