இனங்களுக்கிடையிலான நல்லுறவை பேணுவதற்கு பாடுபட்டவர் தான் மர்ஹும் பாரூக் - ஹக்கீம் எம்.பி

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரசியல்வாதியாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் யூ.எல்.எம்.பாரூக், மக்கள் மனங்களில் நீங்காது நிறைந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் மறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சபரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில், ருவன்வெல்ல தேர்தல் தொகுதியில் கன்னத்தோட்டையைச் சேர்ந்த மறைந்த யூ.எல்.எம். பாரூக் ஆரம்பத்தில் கிராம சபையினூடாக நேரடி அரசியலில் பிரவேசித்தார்.

கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபையிலும் உறுப்பினராக இருந்து, பின்னர் தனது அபிமானத்திற்குரிய அரசியல்வாதியான மறைந்த பி.சி.இம்புலான ஆளுநராக நியமிக்கப்பட்டதன் காரணத்தினால் பொது மக்களின் அமோக ஆதரவுடன், வெறுமனே மூவாயிரம் முஸ்லிம் வாக்காளர்களையே கொண்டிருந்த ருவன்வெல்ல தேர்தல் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அவர்  நாடளாவிய ரீதியில்  சேவையாற்றியதை மக்கள் இன்றும் சிலாகித்துப் பேசுகின்றனர்.

அவர் அரசியல் பிரதிநிதித்துவம் அற்றிருந்த காலத்திலும் கூட, நாங்கள் அமைச்சுப் பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களில்  பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக கை நிறைய விபரங்கள் அடங்கிய கோவைகளுடன் வந்து, சந்தித்து உரிய தீர்வுகளைக் காண்பதில்  அதிக கரிசனை காட்டியிருக்கிறார். நோய்வாய்ப் பட்டிருந்தபோதிலும் அவர் ஓய்ந்திருக்கவில்லை.

அன்னாரின் சேவைகளை பாராட்டி எழுதப்பட்ட “யுகப் புரட்சியொன்றின் மூன்று கோரளை அபிமானம்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு சில வருடங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அவரை பற்றி உரையாற்றக் கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

கேகாலை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்திலும் அவர் பிரதான பங்கு வகித்தார்.அவர் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் “யூ.எல்.எம். பாரூக் மன்றம்” என்ற ஓர் அமைப்பு 2015ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது.

மறைந்த யூ.எல்.எம்.பாரூக் , சாதாரண பொது மக்களுடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்தது அவரது சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.

அன்னாரை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொண்டு ,மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்குவானாக. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அன்னாரை நேசிக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இனங்களுக்கிடையிலான நல்லுறவை பேணுவதற்கு பாடுபட்டவர் தான் மர்ஹும் பாரூக் - ஹக்கீம் எம்.பி இனங்களுக்கிடையிலான நல்லுறவை பேணுவதற்கு பாடுபட்டவர் தான் மர்ஹும் பாரூக் - ஹக்கீம் எம்.பி Reviewed by Editor on August 06, 2021 Rating: 5