(றிஸ்வான் சாலிஹு)
தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தினால் உடனடியாக செயற்படும் வண்ணம் மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியின் புதிய அதிபராக எம்.சோமசூரியம் நியமிக்கப்பட்டு, இன்று (13) வெள்ளிக்கிழமை காலை வேளையில் மட்டக்களப்பு தொழில் நுட்பக் கல்லூரியில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையின் முதலாம் தர உத்தியோகத்தரான திரு.சோமசூரியம் அவர்கள், யாழ் பல்கலைக்கழகத்தின் வர்த்தகமானி பட்டதாரியும், அத்தோடு முதுமானி பட்டமும் பெற்றவராவார்.
அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபராக சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக கல்லூரியின் வளர்ச்சியிலும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் கல்லூரியில் உள்ள சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பூரண ஒத்துழைப்புடன் கடமையாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இங்கு இடமாற்றம் கிடைத்திருக்கின்றது.
புதுக்குடியிருப்பை சேர்ந்த புதிய அதிபர் திரு.சோமசூரியம் அவர்கள், இதற்கு முன்னர் மட்டக்களப்பு ,சம்மாந்துறை ஆகிய தொழில் நுட்பக் கல்லூரிகளில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், பிரதி அதிபராகவும், அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபராகவும் பணியாற்றியதோடு, இவர் நல்ல உள்ளம் கொண்டவராகவும், சக உத்தியோகத்தர்களின் அன்பை பெற்ற ஒரு சிரேஷ்ட வழிகாட்டியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 13, 2021
Rating:

