மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை கொவிட் நிதியத்திற்கு வழங்குவது இச்சந்தர்ப்பத்தில் பெறுமதியானது - அமைச்சர் வாசுதேவ
(அமீன் எம் றிலான்)
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்லாமல் இந்நாட்டில் வசதி வாய்ப்புக்கள் கொண்ட அனைவரும் தமது வருமானத்தில் அரைவாசியை கொவிட் நிதியத்திற்கு வழங்குவது இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பெறுமதியானது என்பதால் அதற்காக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை கொவிட் நிதியத்திற்கு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ அவர்கள்,
பணம் இல்லாத மக்கள் பிரதிநிதிகளிடம் நாம் இதனை கோரிக்கை விடுப்பதில்லை. எனினும் வருமானம் ஈட்டுகின்றன சகல மக்கள் பிரதிநிதிகளும் இந்த சந்தர்ப்பத்தில் தமது சம்பளத்தில் அரைவாசியை வழங்குவதற்கு முன் வரவேண்டும். அது விஷேடமாக முக்கியமானது என்பது எனது எண்ணமாகும்.
அதே போன்று எமது நாட்டில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ள ஏனையவர்களும் தாம் உழைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை இந்த சந்தர்ப்பத்தில் அற்பணிப்பு செய்வது மிகவும் முக்கியமானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைத்து வர்த்தகர்களுக்கும் இது பொருந்தும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.
Reviewed by Editor
on
August 24, 2021
Rating:
