பொருளாதாரத்தை குழப்ப எதிர்க்கட்சி எடுக்கும் முயற்சிக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - அமைச்சர் வாசுதேவ

(அமீன் எம் றிலான்)

நாட்டில் தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டை சில நாட்களுக்கு தற்காலிகமாக மூட அரசுக்கு நாங்களும் முன்மொழிந்தோம். தேயிலை, ரப்பர் உள்ளிட்ட  பெருந்தோட்டத் தொழில்கள், ஏற்றுமதி தொழில்கள் மற்றும் விவசாயம் என்பவற்றை  பராமரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார நிலையை பராமரிப்பதன் மூலம் இது செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தற்போது 10 நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ளது.

எனினும், பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட அனைத்து தொழில் துறைகளையும் மூடுவதற்கே எதிர்க்கட்சியின் ஒரு சில குழுக்களின் யோசனையாக உள்ளது. முழு நாட்டையும் சில மாதங்களுக்கு முற்றாக மூடுமாறு அவர்கள் கூறுகின்றனர்.

அப்படி செய்தால் நாட்டுக்குள் அராஜகம் மற்றும் குழப்பமான சூழ்நிலை உருவாகும்.  இதனைத்தான் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்பார்க்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதார செயற்பாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஒன்று ஏற்படுவதற்கு அரசு இடமளிப்பதில்லை என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான உரையில் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டின் அனைத்துத் துறைகளையும் முடக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன முயற்சி செய்கின்றன. பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி தொழில் போன்று விவசாயத்தில் ஈடுபடும் மக்களையும் அவர்கள் ஈடுபடும் தொழிலில் இருந்து தடுப்பதற்கு முயற்சிப்பது வெற்று முயற்சியாகும் என நான் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம் நாட்டில் குழப்பமான நிலையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும். அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

எமது ஜனநாயக இடதுசாரி முன்னணி அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றாக முன்னின்று, மேலும் பரந்த அளவில் பொதுமக்களை விழிப்பூட்டி எதிர்க் கட்சியினரின் இந்த முயற்சியை தோல்வியடையச் செய்ய செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



பொருளாதாரத்தை குழப்ப எதிர்க்கட்சி எடுக்கும் முயற்சிக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - அமைச்சர் வாசுதேவ பொருளாதாரத்தை குழப்ப எதிர்க்கட்சி எடுக்கும் முயற்சிக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - அமைச்சர் வாசுதேவ Reviewed by Editor on August 24, 2021 Rating: 5