தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் சமூக எதிர்பார்ப்புக்களும்!!


ஒரு கல்விச்சமூகத்தின் முதுகெலும்புகளாக பல்கலைக்கழகங்களைக் குறிப்பிடலாம். நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுள் முதன்மை நிலையிலுள்ள இப்பல்கலைக்கழகங்களிலிருந்தே பல்வேறு தொழில் நிலைகளுக்கும் மனிதவளம் பங்கிடப்படுகின்றது. 

தொழில்வாண்மை ரீதியான எதிர்பார்ப்புக்களையும் தாண்டி சமூக நிலைகளில் பல்கலைக்கழகங்களின் பங்காற்றுதல்கள், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதிகளவாக அண்மைக் காலங்களில் உணரப்பட்டிருக்கின்றன. 

இதில் பெரும்பான்மைச் சமூகம் தமது எதிர்பார்ப்புக்களை முன்வைத்ததை விட சிறுபான்மைச் சமூகங்கள் பல்கலைக்கழகங்களை தத்தமது சமூக விடுதலைக்கான நிறுவனமாக கடந்த காலங்களில் நம்பி வந்திருக்கின்றன. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், கிழக்குப் பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார ரீதியான முன்னெடுப்புக்கள் பலவும் இப்பல்கலைக்கழகங்களைச் சார்ந்தே கொண்டு செல்லப்பட்டன. 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினது வருகையின் போதும் இத்தகையதொரு சமூக எதிர்பார்ப்பு இப்பிராந்திய மக்களிடையே வேரூன்றி இருந்தது. எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்ளால் இப்பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டமையும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் இது அமைந்திருந்தமையும் தேசிய ரீதியாக முஸ்லிம்களிடையே இவ்வெதிர்பார்ப்பினை அதிகரிக்கச் செய்திருந்தது. 

இலங்கை இனப்பிரச்சினை கூர்மையடைந்திருந்த தொண்ணூறின் நடுப்பகுதியில் தோற்றம் பெற்ற இப்பல்கலைக்கழகம், இரண்டாயிரங்களில் முன்னெடுத்த அரசியல், சமூக நிலைப்பாடுகள் இப்பிராந்திய மக்களின் இணக்கப்பாட்டோடும், பங்குபற்றுதலோடும் இடம்பெற்றன. கட்சி அரசியல் சாராத மாணவர் பேரவையின் முன்னெடுப்புக்களில் மக்களுக்கு அதீத நம்பிக்கை இருந்த காலமது. இதனால் மக்களின் ஒத்துழைப்போடு மாணவர்களால் 'ஒலுவில் பிரகடனம்' போன்றவை மேற்கொள்ளப்பட்டன. 

அரசியல் ரீதியான இத்தகு நம்பிக்கைகள் பிற்காலத்தில் குறைய ஆரம்பித்தன. கட்சி சாராமல் சமூக நலன் பேசிய பலரும் கட்சி அரசியலில் நம்பிக்கைகொண்டியங்கியதும், விலைபோனதும் இதற்குரிய காரணங்களாக இருக்கலாம். 

எனினும் புத்திஜீவித்துவ உரையாடல்கள் சமூக, இலக்கிய, பண்பாட்டுத் துறைகளில் கணிசமானவளவு சமூகப் பங்குபற்றுதல்களோடு இடம்பெற்றன. இலக்கிய, பன்னாட்டு ஆய்வரங்குகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. நூல்கள் பலவும் வெளிக்கொணரப்பட்டன. ஆய்வு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. குறிப்பாக, கல்வி முதுமாணி, முதுதத்துவமாணி, கலாநிதிக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

ஆயினும் சமூகப் பரப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பணிகள் பற்றிய போதாமைகள் உணரப்படுவதான குற்றச் சாட்டுக்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. நமது அரசியல், இலக்கிய, கலாசார, பண்பாட்டுப் புரிதல்களை மாற்றங்களுடன் முன்னோக்கி நகர்த்த 'நம்மவர்களின் தலைமைத்துவம் அவசியம்' என்கின்ற குரல்களும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கான ஒரு தருணம் நமக்குக் கிடைத்திருக்கிறது. 

இன்று ஒரு புதிய துணைவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பதவியேற்றிருக்கின்றார். அவர் இப்பல்கலைக்கழகத்திலேயே கற்று, விரைவுரையாளராகி, போராசிரியராகவும் துணைவேந்தராகவும் உயர்ந்திருக்கின்றார். 

இவர் நமது கருத்துக்களை புன்முறுவலோடு காதுகொடுத்துக் கேட்பவர். தவிர எதனையும் ஆழமான நுணுகி நோக்கும் சமூகவியல் ஆய்வாளர். இப்போது இவர் மீதுள்ள பெறுப்பும் பணியும் சமூக நோக்கில் மிகுந்த எதிர்பார்ப்புக்கள் கொண்டவையாகும். 

புதிய துணைவேந்தர் தமது காலப் பகுதியில் இப்பல்கலைக்கழகம் வெகுஜனப் பாரம்பரியம் பெற்றுத் துலங்குதற்கும், அரசியல், சமூக, பண்பாட்டு, இலக்கியப் பாரம்பரியங்களை உயிர்ப்பிப்பதற்கும் துணைநிற்க வேண்டும். பல்கலைக்கழகத்தை சமூகத்தோடு தொடர்புறுத்தும் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்ல வேண்டும். அறிவுஜீவித்துவ உரையாடல்களையும் ஆய்வு முயற்சிகளையும் விசாலிக்க வேண்டும். 

இவையே இப்பல்கலைக்கழக சமூகத்தினரின் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.

(ஆசிரியர் அப்துல் றஸாக்)



தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் சமூக எதிர்பார்ப்புக்களும்!! தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் சமூக எதிர்பார்ப்புக்களும்!! Reviewed by Editor on August 09, 2021 Rating: 5