அதிகார நரம்புகளின் தீராத வேட்கை...

அம்மார்
உன் தாய் உயிர்மூலம் 
சிதைக்கப்பட்டாளா
அம்மார்
உன்தந்தை இரண்டாகப் 
பிளக்கப்பட்டாரா
ஆனபோதும் நீ வெகுண்டிருக்கக்கூடாது
அம்மார்
உன்சகோதரிகள் பத்திரம்தானே
என்ன அவர்களும் நாசமாக்கப்பட்டார்களா
இன்னும் உன் காதலி
மற்றும் உன்னைச் சூழவுள்ள மலர்கள்
கருக்கப்பட்டதா

உன் சோற்றுப்பானையை தயங்காமல் 
என்னிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் 
அரைநூற்றாண்டு தாண்டியும் உன் 
படுக்கையறை ஜன்னலை நான் 
திறக்கக்கூடாதென்று போராட 
உனக்கத்தனை திமிரா அம்மார்

உன்தலை இன்னும் நிமிர்ந்திருப்பதும்
முள்ளந்தண்டுகள் வலுவிழக்காதிருப்பதும்
ஓலிவ் மரங்கள் பூத்துக்கிடப்பதும்
உன்வாசனை கலந்த காற்றை நான் 
சுவாசிப்பதும் சதாவும் இம்சிக்கிறது
முதலில் உன் பெயரை மாற்றிவிடு
எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை
என் பெயர் உலக பொலிஸ்காரன்
உனக்குப் பிடித்துத்தானாக வேண்டும்


இது கலைமுகம் இதழ் 72இல் வெளியான கவிதாயினி நுஹாவின் கவிதை தொகுப்பு..




அதிகார நரம்புகளின் தீராத வேட்கை... அதிகார நரம்புகளின் தீராத வேட்கை... Reviewed by Editor on September 27, 2021 Rating: 5