மர்ஹும் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் சீரான அரசியல் பாதையும் மரணித்துவிட்டது

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் சட்டத்தரணி எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி இப்பத்தி எழுதப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பயணமானது பிரித்தானியர் காலத்திலிருந்தே ஏனைய சகோதர இனங்களின் குறிப்பிட்ட சில தலைவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலிருந்தே ஆரம்பமாகியது. 1989க்கு முற்பட்ட காலத்தில் தேசியக் கடச்சிகளின் நீரோட்டத்துடன் இணைந்ததாகவே முஸ்லிம் அரசியல் வளர்ச்சியடைந்து வந்தது. இந்த நிலையை மாற்றியமைத்து தனித்துவ அரசியலை முஸ்லிம்களுக்கு அறிமுகம் செய்தவர்தான் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்.

இந்நிலையில் பயங்கரவாதப் பிரச்சினை ஏற்பட்டதுடன் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவம் என்பது மழுங்கடிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டபோதுதான் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களும் இந்நாட்டில் வாழுகின்ற இனம் அவர்களுக்கும் ஏனைய இனங்களுக்குள்ள சுதந்திரம், சமத்துவம், உரிமைகள் உள்ளது என்ற கருத்தாடல்களை தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணர்ந்தார். அதன் வாயிலாக அரசியல் ரீதியில் சமூகத்தை வழிநடாத்திச்சென்றார்.

அதன் வழி உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக இலங்கையின் மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் அரசியல் பலம் 1989 – 2000 ஆண்டு வரைக்கும் தலைவர் எம்.எச்.எம். அஷ்றப் அவர்களினால் நிரூபித்துக்காட்டப்பட்டது. இணக்கப்பாடான தேசிய நீரோட்டத்துடன் கலந்த அரசியல் வளர்ச்சியும் தனித்துவத்தை பாதிக்காத வகையில் முன்கொண்டுசெல்லப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் அரசியலமைப்பு தீர்வொன்றுக்காகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட தலைவர் அவர்கள் எந்தவொரு தீர்வானாலும் அதில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக இருந்ததுடன், தென்கிழக்கை மையப்படுத்திய அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்தார். அதனை நிருபிக்கும் சான்றாக 2000ம் ஆண்டு சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட யாப்பு நகலில் காணலாம்.

ஆயினும் இவ்வாறான முஸ்லிம் கட்சி உருவாக்கப்பட்டதும், அதன் வளர்ச்சியும் சில விமர்சகளர்களால் இனவாதமாக நோக்கப்படுகின்ற சம்பவங்களும் இங்குகுறிப்பிடத்தக்கது. அதனை நிருபிக்கும் வகையில் 2000ம் ஆண்டு தலைவர் மரணித்ததன் பின்னர் கட்சியை பொறுப்பெடுத்தவர்கள் இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் குறிப்பிட்ட தேசியக் கட்சியை பகிரங்கமாக எதிர்ப்பதும், காலைவாவருவதும் பின்னர் அமைச்சுப் பதவிகளுக்காகவும், கொந்தராத்துகளுக்காகவும் அக்கட்சியோடு இணைவதாகவும் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் தெளிவாக்குகின்றது. 

உண்மையில் மறைந்த தலைவர் அஷ்றப் அவர்கள் மிகச் சாதுரியமாக அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டதன் விளைவு இன்றும் முஸ்லிம்களின் அரசியல், அபிவிருத்திசார், கல்விசார், தொழில்சார் விருத்திகளை ஏற்படுத்தியே வருகின்றது. ஆனால் தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் அரசியல் பீடங்கள் காலத்துக்கேற்ற சரியான முடிவுகளையோ, காய்நகர்த்தல்களையோ, அரசியல் கொள்கைகளையோ வெளிக்கொணராதன் விளைவு இனவாதிகளின் வாய்க்கு தீனிபோடவும், முஸ்லிம் அரசியலை தேசியக் கட்சிகள் பிழையான கண்ணோட்டத்தில் நோக்கவும் வழிசெய்துவருகின்றது. அதன் விளைவுகளை கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் பல இனக் கலவரங்களின் ஊடாக அனுபவித்து வருகின்றனர்.

இன்று முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே ஐக்கியமாக வாழ்வதை சீரழித்து, தேசியக் கட்சிகளுடன் பேசி போதிய தீர்வுகளை பெறமுடியாத நிலையில் கையறுந்து காணப்படுவதற்கு காரணம் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தில், உயர்பீடத்தில் உள்ளவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பப் பாதையை மறந்து காலத்துக்கேற்ற சரியான முடிவுகளை சமூகத்தின் புத்திஜீவிகளை கலந்துபேசி எடுக்காத நிலைதான் என்றால் அது மிகையாகாது. 

இலங்கை முஸ்லிம்களுக்கு என்று அன்றிருந்த தலைவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட பல சலுகைகள், உரிமைகள் பறிபோகக் கூடிய நிலைமைகள் உருவாகியிருக்கும் இச்சூழ்நிலையில் கூட முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட சபையில் மௌனிகளாக இருப்பதும், நடிப்பதும் வேடிக்கையாகவே உள்ளது. 

குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் இரத்தத்தில் ஊறிய முஸ்லிம் காங்கிரஸ் எனும் நாமத்தை செல்லாக்காசாக மாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமைத்துவங்களை நோக்குகின்றபோது தெளிவான அரசியல் கொள்கை இல்லாமல் திண்டாடுவதும், மக்களின் வாக்குப்பலத்தை பிரயோகிக்காமல் இருப்பதும், கட்சிக் கொள்கையை காலத்துக்கும் இன்றைய ஐக்கிய இலங்கைக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்காமலும், தகுதியற்ற சிலரை வைத்துக்கொண்டு கட்சியை வழிநடாத்துவதும் எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் இருப்பை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் என்றால் அது மிகையாகாது.

எனவே, மரணித்துப்போன முஸ்லிம்களின் அரசியல் பயணத்தை சீராக்குவதற்கான வழிகளை புத்திஜீவிகளும், வாக்காளர்களும் சீராக்க முன்வரவேண்டும். “பல்லின மக்களோடும் இணைந்த அரசியல் பயணத்துக்கான அத்திவாரத்தின் மேல்”


எஸ்.எம். சஹாப்தீன்
பட்டதாரி ஆசிரியர், 
நிந்தவூர்.








மர்ஹும் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் சீரான அரசியல் பாதையும் மரணித்துவிட்டது மர்ஹும் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் சீரான அரசியல் பாதையும் மரணித்துவிட்டது Reviewed by Editor on September 16, 2021 Rating: 5