தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக வளங்களும், அது வழங்கும் சேவைகளும்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகம் ஒலுவில் வளாகத்தில் உள்ளது. சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் தனியொரு நூலகம் உள்ளது.

நூலகங்கள் இப்போது நூல்களோடு மட்டும் சுருங்கிய நிறுவனங்கள் அல்ல. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல தரப்பட்ட வளங்களை அவை கொண்டுள்ளன; வித்தியாசமான சேவைகளை வழங்குகின்றன. இதனால் இப்போது 'நூலகம்' என்று அழைப்பதை விடவும், உரிய வளங்களும் வசதி வாய்ப்புகளும் உள்ளவற்றை 'தகவல் வள மையம்' (Information Resource Centre) என்றே அழைக்கிறார்கள்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகமும் ஒரு முக்கியமான தகவல் வள மையமாகவே இயங்குகிறது.

நூல்களை அங்கிருந்தே வாசிக்கும் வசதிகள், இரவல் பெறும் வசதிகள் உள்ளன. இது எல்லோருக்கும் தெரிந்த- வழக்கமான நூலக சேவைதான். அந்த இடம் வாசிப்பதற்கு இதமான, அமைதியான சூழல். இருந்தால் எழும்ப மனம் வராது.

இங்குள்ள அரிய நூல் சேகரப் பகுதி (Rare Collection) மிக முக்கியமான ஒன்று. பேராசிரியர் எம்.எம்.உவைஸ், பிரபல நூலகர் எஸ்.எம்.கமால்தீன், ஆய்வாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல், பேராசிரியர் எஸ்.ஏ.ஹுஸைன்மியா உள்ளிட்ட பலரது தனிப்பட்ட நூல் சேகரிப்புகள் இங்குள்ளன. இவற்றுள் பல இப்போது பெறற்கரியவை. 

இவற்றை உள்நாட்டு - வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலர் தேடிப் பெற்றுப் பயன்படுத்துவதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

இங்குள்ள கலாச்சார அரும்பொருள் காட்சியகம் (Cultural Museum) இன்னொரு சிறப்பம்சம். இது குறித்து தனியே விரிவாக எழுத வேண்டும்.

1997 இல் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழா, மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் முன்னெடுப்பில் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இதில் பல மார்க்க நிகழ்ச்சிகளும் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின. மீலாத் கிராமமும் திறந்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை தேசிய மீலாத் விழா, இரு முக்கிய விடயங்களால் காலத்தால் அழியாத வரலாற்றுப் பங்களிப்பாக நிலைபெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

அதில் ஒன்றுதான் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்ற அருமையான நூல். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அதை வெளியிட்டது. மிக முக்கியமான தகவல்கள் பொதிந்த நூல் அது.

இதன்போது மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களது பெரும் முயற்சியால், இங்குள்ள பல ஊர்களிலிருந்து கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த - பிரதேச மக்களது வாழ்வியல் கோலங்களைப் பிரதிபலிக்கும்- அரும்பொருட்கள் திரட்டப்பாட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

பின்னர் இவை அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதிவளைவிற்கு அருகில் அமைந்துள்ள கல்வி அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டு, கலாச்சார அரும்பொருட் காட்சியகமாக (Cultural Museum) இயங்கியது. அப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பராமரிப்பிலேயே அது இருந்தது. தேசிய மீலாத் விழாவின் அடுத்த முக்கிய அடைவே இது. காத்தான்குடியில் முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரும்பொருட் காட்சியகமொன்றை நிறுவியுள்ளார். அதற்கு இதுவே முன்னோடி முயற்சியாகும்.

பின்னர் ஒலுவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிரதான நூலகத்தின் நிரந்தரக் கட்டிடத்திற்கு இது மாற்றப்பட்டது. இப்போது  இந்தக் கலாச்சார அரும்பொருட் காட்சியகம்,

பிரதான நூலகத்தின் ஒரு பகுதியாக இயங்குகிறது. 

இங்கு பல அரும்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் பார்த்துப் பயன்பெறும் இடமாக இது உள்ளது. உங்களது பார்வைக்கு சில படங்களை இணைத்துள்ளேன்.

பல்கலைக்கழக நூலகம் வழங்கும் இலத்திரனியல் சேவைகள் (E-servies)இன்னொரு முக்கியமான அம்சம். அறபுத் தமிழ் நூல்கள் பலவற்றை சேகரித்து, எண்ணிமப்படுத்தி (Digitize) ஆவணமாகப் பாதுகாத்து வருகின்றனர். மர்ஹூம் எஸ்.எச்.எம். ஜெமீல் தொகுத்துள்ள நாட்டார் பாடல்களின் ஒலி வடிவ சேகரமும் இதில் உள்ளது. இவற்றை இணைய வழியூடாக எல்லோரும் உசாவிப் பயனடையலாம்.

நூல் விபரப் பட்டியல்கள் (Catalogues) பல தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படுவன.

அதுபோல முஸ்லிம் சமூகம் கண்ட மிகப்பெரும் ஆய்வாளுமையான மர்ஹூம் எம்.எம்.எம்.மஹ்றூபின் ஆய்வெழுத்துகள் தொகுக்கப்பட்டு, பல்கலைக்கழக நூலகத்தால் தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொகுத்தவர் முதல் உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் சேர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நூல் வெளியீடானது, இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பான ஆய்வறிவியலுக்கு - Muslim Studies க்கு- செய்யப்பட்ட  தனிப்பெரும் பங்களிப்பாகும். இதைப் பற்றித் தனியாக எழுதுகிறேன்.

இவ்வாறான காலத்தால் அழியாத பங்களிப்புகள்- வளங்கள்- நூலக சேவை களால் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

இப்போதைக்கு இதைச் சுருக்கமாகவே முன்வைத்துள்ளேன்.


அன்புடன்,

சிராஜ் மஷ்ஹூர்










தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக வளங்களும், அது வழங்கும் சேவைகளும் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலக வளங்களும், அது வழங்கும் சேவைகளும் Reviewed by Editor on September 26, 2021 Rating: 5