பிரதமரை சந்தித்த இத்தாலியிலுள்ள இலங்கையர்கள்

இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (14) செவ்வாய்க்கிழமை போலோக்னா நகரில் இடம்பெற்றது.

இத்தாலியின் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த இலங்கை பிரதிநிதிகள் இவ்வாறு கௌரவ பிரதமர் தங்கியிருந்த போலோக்னா ஹோட்டலில் கௌரவ பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் இவ்வாறு இத்தாலிக்கு விஜயம் செய்து இத்தாலியில் வாழும் இலங்கை மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து இலங்கை பிரதிநிதிகள் கௌரவ பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

கௌரவ பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இத்தாலி மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு நட்பு காரணமாக இதுவரை இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பிலும் அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் நினைவுகூர்ந்தனர்.

மிலான் நகரில் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் அமைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்ட தொலைநோக்கு செயற்பாடு காரணமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் இலங்கையர்கள் பலரது காலமும் பணமும் மிச்சப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர் அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு அங்கு வருகைத்தந்திருந்த பிரதிநிதிகள் கௌரவ பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.

குறித்த முன்மொழிவு தொடர்பில் இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கௌரவ பிரதமர், வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு அச்சந்தர்ப்பத்திலேயே அறிவுறுத்தினார்.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள கௌரவ பிரதமர் எதிர்வரும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து இராஜதந்திர சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இத்தாலிக்கான பதில் இலங்கை தூதுவர் சிசிர செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்று பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பிரதமரை சந்தித்த இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் பிரதமரை சந்தித்த இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் Reviewed by Editor on September 14, 2021 Rating: 5