யானைகளுக்காக அமைக்கப்படும் வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்க குறைந்த செலவில் உள்ளூர் உற்பத்தி

யானைகளுக்காக அமைக்கப்படும் வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்க இதுவரை பயன்படுத்தப்பட்ட அதிக செலவுமிக்க எனஜைசர் இயந்திரம், இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் 76,300 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படுவதாக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் வெள்ளிக்கிழமை (22) அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த இயந்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகின. 

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய நனோ விஷன் அநுராதபுர பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இந்த உற்பத்தியை அறிமுகப்படுத்தி கருத்துத் தெரிவித்த ஜீ.வி.கே.சமரநாயக்க குறிப்பிடுகையில், இதுவரை 400 உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன், சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தை இந்த இயந்திரத்தினால் பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, குறித்த உபகரணத்தைப் பயன்படுத்துவதற்கு இதன் தொழில்நுட்ப ரீதியான துல்லியத் தன்மை குறித்து மேலும் ஆராய்ந்து பார்க்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதற்கு மேலதிகமாக தம்பபன்னி ரஜமஹாவிகாரைக்கு காணிகளை ஒதுக்குவது தொடர்பில் அம்பாறை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான இடங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக, அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரங்கொடி, சார்ள்ஸ் நிர்மலநாதன், இசுறு தொடங்கொட, அகில எல்லாவல, ரோஹன திசாநாயக, எஸ்.எம்.எம்.முஷாரப், சாணக்கியன் இராசமாணிக்கம், மாயதுன்ன சிந்தக அமல், சிவஞானம் சிறிதரன் மற்றும்  வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.






யானைகளுக்காக அமைக்கப்படும் வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்க குறைந்த செலவில் உள்ளூர் உற்பத்தி யானைகளுக்காக அமைக்கப்படும் வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்க குறைந்த செலவில் உள்ளூர் உற்பத்தி Reviewed by Admin Ceylon East on October 26, 2021 Rating: 5