அதிபர்- ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பிரதமர் தீர்வு

சம்பள முரண்பாடுகளை தீர்க்குமாறு கோரி நடத்தப்பட்டுவந்த போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களாக சம்பள உயர்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (12)  அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.

சம்பள முரண்பாடுகளை தீர்க்குமாறு கோரி அதிபர்- ஆசிரிய தொழிற்சங்கத்தினர் கடந்த 93 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேற்படி பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு தலையீடு செய்த கௌரவ பிரதமர், அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு அழைத்து இன்றைய தினம் இம்முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் முன்மொழிவிற்கமைய மூன்று பகுதிகளாக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட சம்பளத்தை முதல் கட்டமாக 2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும், எஞ்சிய தொகையை 2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அவ்வாண்டில் பெற்றுக் கொடுப்பதற்கும் இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் முன்மொழியப்பட்டது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினையை அரசாங்கம் உணர்கின்றது எனவும், சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என்பதை தாம் ஏற்பதாகவும் கௌரவ பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக திறைசேரியிலிருந்து கிடைக்கும் நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் இந்த கோரிக்கையை ஒரே தடவையில் நிறைவேற்றுவது சாத்தியமன்று என்றும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

பிள்ளைகளின் கல்வியை தொடர்ந்து தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியத்தின் மத்தியில் அரசாங்கம் இத்தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் மத்தியில் குறிப்பிட்டார்.

2021.08.09 வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு முன்வைத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் செயற்படுத்துவதாகவும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர் சேவையை மூடப்பட்ட சேவையாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நவம்பர் மாதம் பிரகடனப்படுத்தல் உள்ளிட்ட பிற பரிந்துரைகளை 06 மாதங்களுக்குள் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.








அதிபர்- ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பிரதமர் தீர்வு அதிபர்- ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு பிரதமர் தீர்வு Reviewed by Editor on October 13, 2021 Rating: 5