ஆசிரியர் பணிக்குப்பகரமாக வேறு தரப்பினர் உள்நுழைவது கேவலமானது

(சர்ஜுன் லாபீர்)

ஆசிரியர்களின் பணிக்குப் பகரமாக வேறு தரப்பினரைப் பயன்படுத்த எத்தனித்த பெருமைக்குரியவர்கள் மத்தியில் ஆசிரியத் தொழில் செய்வதனை கேவலமாகவே கருத வேண்டியுள்ள மன நிலை உருவாகியுள்ளதாக இவ்வாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எழுந்துள்ள சமகால நெருக்கடி குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா, செயலாளர் எம்.கே.எம்.நியார் ஆகியோர் கூட்டாக இவ்வறிக்கையினை விடுத்துள்ளனர்.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆசிரியர் தொழிலில் பயிற்சிகளையும் பட்டம்பின் கல்விச் செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வந்த நாட்டில் குறை நிரப்பிகளைக் கொண்டு ஆசிரியப் பணியை நிரப்பிக்க எத்தனித்திருப்பது சிந்திக்கத்தக்க விடயமாகும்.

உலக இயங்கியலில் எல்லாத் தரப்பானரையும் உருவாக்கி திருப்தி காணும் ஆசிரியர் சமூகத்தின் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்த எடுத்த செயற்பாடுகளுக்கு பட்டதாரிப் பயிலுனர்கள் ஒத்தாசையாக இருக்க முனைந்தமை அவர்களை உருவாக்கிய ஆசிரியர் சமூகத்திற்குச் செய்த மிகப் பெரிய துரோகமாகும். தொழிற்துறையின் ஆரம்ப கட்டத்தையே பிழையான தொடக்கமாகக் கொண்ட அவ்வாறான விரல்விட்டு எண்ணத்தக்கவர்களின் எதிர்காலம் அவ்வாறே மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களின் கலவியின் மீது அக்கறையற்ற அவ்வாறான செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம்.

மாணவர்களின் நலன்கருதி நாம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாடசாலைக்குத் திரும்புமாறு அதிபர்-ஆசிரியர்களை அழைக்கின்றோம். கடந்த வருடம் முதல் பாதிப்புக்குள்ளாகி இவ்வருடத்தின் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. மாணவர்களின் கல்விக்குப் பாதிப்பில்லாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க நாம் எண்ணியுள்ளோம்.

நூறு நாட்களைக் கடந்து விட்ட அதிபர்-ஆசிரியர்களின் போராட்ட நியாயங்களை உணர்ந்து நல்லதொரு தீர்வொன்றுக்கு சம்பந்தப்ட்ட தரப்பினர் வர வேண்டும். தொடர்ந்தும் முரண்பாட்டுச் சூழலுடன் செல்லுமானால் எதிர்வரும் காலங்களில் இருதரப்பினரும் தேவையில்லாத மனக்கசப்புகளுடன் பயணிக்க வேண்டிவரலாம்.

பாடசாலைக்குத் திரும்பும் தொழிற்சங்கங்களின் முடிவினைச் சாதகமாக்கி அரச தரப்பு நல்லதொரு முடிவினை முன்வைக்கும் என தாம் நம்புவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆசிரியர் பணிக்குப்பகரமாக வேறு தரப்பினர் உள்நுழைவது கேவலமானது ஆசிரியர் பணிக்குப்பகரமாக வேறு தரப்பினர் உள்நுழைவது கேவலமானது Reviewed by Admin Ceylon East on October 22, 2021 Rating: 5