Fribroids / கருப்பையில் உருவாகும் தசைக்கட்டிகள்

 Fibroids என்பது கருப்பையில் வளரும் சாதாரண தசைக்கட்டிகளாகும்.

இது மிகவும் பொதுவாக காணப்படும் ஒரு சதை வளர்ச்சியாகும். அநேகரில் இத்தசைக்கட்டிகள் இருப்பினும் எவ்வித நோயறிகுறிகளையும் ஏற்படுத்தாது.

இக்கட்டிகள் கருப்பையின் அகவணிக்கு (uterine cavity) அருகில் அமையும் போது நோயறிகுறிகளை ஏற்படுத்தும்

பொதுவான நோயறிகுறிகள்

1. மாதவிடாயின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படுதல். பொதுவாக அதிக வயிற்றுவலி ஏற்படாது.  எனினும் சிலரில் ஏற்படலாம்.

2. அடிவயிறு வீக்கமாக காணப்படல்

3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்/மலச்சிக்கல்

4. சிலரில் கருத்தரித்தல் தாமதித்தல்


சிலரில் வேறு நோய்நிலைகளுக்காக ஸ்கான் பரிசோதனை செய்யும் பொழுது எதேற்சையாக கண்டறியப்படலாம்.

இக்கட்டிகள் ஏன் உருவாகின்றது என்பதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஹோர்மோன் தழும்பல்களுடன் தொடர்புடையது. அதேவேளை பரம்பரைக்காரணிகளுடன் தொடர்புடையது.  மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் இவை படிப்படியாக சுருங்கும்.

இக்கட்டிகள் பொதுவாக 30-50 வயதான பெண்களில் காணப்படும். இவை புற்றுநோயாக மாற்றமடைவதில்லை


சிகிச்சை முறைகள்

-நோயறிகுறிகள் இருந்தால் மட்டுமே இவற்றை அகற்ற வேண்டும்.

- சிறிய கட்டிகள் இருக்கும் போது முதலில் மாதவிடாய் இரத்தப்போக்கு குறைவடைய மருந்துவகைகளை பாவித்து பார்க்கலாம். மருந்துகளுக்கு சரியாகாவிடின் மட்டுமே சத்திரசிகிச்சை செய்ய வேண்டும்.

- பெரிய கட்டிகள் இருக்கும் நிலையில் அவை வயிற்றிலுள்ள ஏனைய உருப்புகளை நசிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல் என்பன ஏற்படலாம். எனவே அகற்றுவது நல்லது.

- கருப்பைக்குழியில் காணப்படும் போது அவை சிறிய கட்டிகளாக இருப்பினும் அதிகளவு இரத்தப்போக்கை ஏற்படுத்த கூடியவை அவற்றை சத்திர சிகிச்சை மூலம் அல்லது Hysteroscopy கருப்பையினுல் சிறு கமரா செலுத்தி அகற்றும் முறைமூலம் அகற்றலாம்.

- பெரிய கட்டிகளை சத்திரசிகிச்சை மூலம் Myomectomy அகற்றவேண்டும். இவற்றை சாதாரணமாகவோ Laparoscopy மூலமாகவோ அகற்றலாம்.

- குழந்தை எதிர்பார்த்துள்ளவர்களில் சிறிய கட்டிகளை <3cm அகற்ற அவசியமில்லை. இக்கட்டிகளுடன் கருத்தரிப்பதால் தாய்க்கோ குழந்தைக்கோ பாதிப்புகள் ஏற்படாது.

- சிலரில் மிகப்பெரிய கட்டிகள், பல கட்டிகளுடன் இனிமேல் கருத்தரிப்பதில்லை என்றுள்ளவர்களில் கருப்பை அகற்றும் சத்திரசிகிச்சை செய்யப்படும்.

- சிலரில் கருப்பைக்கட்டிகளை அகற்றிய பின்னர் மீண்டும் உருவாகலாம். இவற்றை சுருக்கமடைய செய்யும் மாத்திரைகள் இருப்பினும் அவை மிகச்சிறந்த பலனை அளிப்பதில்லை.

மேற்கூறப்பட்ட நோயறிகுறிகள் காணப்படின் அருகிலுள்ள வைத்தியநிபுணரை நாடி மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்

Dr A C M Musthaq
MBBS(Col), MD (Obs/Gyn), MRCOG(UK), MSLCOG
Advance Training in Laparoscopy
Resident Consultant Obstetrician and Gynaecologist
National Hospital Kandy



Fribroids / கருப்பையில் உருவாகும் தசைக்கட்டிகள் Fribroids / கருப்பையில் உருவாகும் தசைக்கட்டிகள் Reviewed by Admin Ceylon East on October 28, 2021 Rating: 5