ஆரோக்கியமான கர்ப்பகாலம் (பகுதி 3) வைத்திய ஆலோசனை

உணவே மருந்து...

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், அல்லது கர்ப்பமடையத் திட்டமிட்டிருந்தால், ஆரோக்கியமான/சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். 

கருப்பையில் வளரும் குழந்தை சீராக வளர தேவையான  ஊட்டச்சத்துக்களை பெற  முற்றுமுழுவதும் தாயையே நம்பியுள்ளது.

ஆரோக்கியமான சமநிலையான உணவுகளை பெற , அன்றாட வழமையான உணவுவகைகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

உணவுவகைகள்

 1. பழங்கள் மற்றும் காய்கறிகள்

ஒரு நாளைக்கு குறைந்தது 5 பகுதிகள்/portions பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.  

பழவகைகள் , உலர்த்தப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளை பயன் படுத்தலாம். எனினும் சீனி அல்லது உப்பு மேலதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது சிறந்தது

2. புரத உணவுகள் / Proteins

புரதச்சத்து உள்ள உணவுகள் இறைச்சி, மீன், கோழி, முட்டை, போஞ்சி, பருப்பு வகைகள் மற்றும் விதைகள் என்பவையாகும்.  குழந்தையின் வளர்ச்சிக்கான கட்டுமான அமினோஅமிலங்களை புரதம் வழங்குகிறது.

வாரத்தில் இரண்டு தடவையாவது மீன்வகைகள் சாப்பிடுவது சிறந்தது.  அவற்றில் ஒன்றை (சால்மன், அல்லது மெகரல்) எண்ணெய் தன்மையுடைய மீனாக இருப்பது சிறந்தது.  

கர்ப்பிணித்தாய்மார்களும் கருத்தரிக்க முயற்சிப்பவர்களும் , சில வகையான மீன்களை (சுறா, வாள்மீன் மற்றும் மார்லின்) தவிர்ப்பது சிறந்தது.

கோழிமுட்டை தவிர்ந்த ஏனைய முட்டைவகைகளை தவிர்ப்பது சிறந்தது. முழுமையாக சமைத்தபின்னர் உண்ணுவதன் மூலம் சில பக்ரீரியா தொற்றுக்களை தவிர்க்கலாம்.

ஈரல் கறிவகைகளை அதிகளவு உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது. ஈரலில் அதிகளவு விடமின் A சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு விடமின் A தேவை , எனினும் அதிகளவு விடமின் A குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.

பால்வகைகள் - ஆடு, மாடு , ஒட்டகப்பால் என்பன சிறந்த போசாக்கை தரக்கூடியவை. ஆனால் கொதித்தாரிய அல்லது சுத்திகரிக்கப்பட்ட பாலை மட்டும் பயன்படுத்தவும். நேரடியாக பயன்படுத்தும்போது லிஸ்டீரியா எனும் தொற்று ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம்.

இறைச்சிவகைகளை உண்ணும் போது முழுமையாக நன்றாக சமைத்த பின்னரே உண்ண வேண்டும். அரைவாசி சமைக்கப்பட்ட உணவுகளிலிருது Toxoplasmosis எனும் தொற்று ஏற்படலாம்.

3. மாச்சத்து : Carbohydrate 

இவை உடலுக்கு தேவையான சக்தியையும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான குளுக்கோசையும் வழங்கும் உணவுகளாகும். இதில் கிழங்குவகைகள், கோதுமை , அரிசி , நூடில்ஸ் என்பன அடங்கும். 

தவிடு நீக்கப்படாத அரிசி, கோதுமை என்பவை சிறந்தது. அதிகளவு சீனி சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

கர்ப்பமாவதற்கு முன்னரும் , கர்ப்பகாலத்திலும்  இருக்கும் தாயின் போசாக்கு நிலைமை கர்ப்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளாகும். 

சரியான உடற்திணிவை பேணுவதன் மூலம் (BMI) கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய பல சிக்கல்களை தவிர்க்கலாம்.


டாக்டர்.முஹம்மத் முஸ்தாக்
மகப்பேற்று பெண்ணியல் நோய் விசேட வைத்திய நிபுணர்
தேசிய வைத்தியசாலை கண்டி














ஆரோக்கியமான கர்ப்பகாலம் (பகுதி 3) வைத்திய ஆலோசனை ஆரோக்கியமான கர்ப்பகாலம் (பகுதி 3) வைத்திய ஆலோசனை Reviewed by Editor on November 22, 2021 Rating: 5