மக்களின் ஏகோபித்த தீர்மானமே முஷாரபின் ஆதரவாகும் - ஊர் சமூகம் கருத்து

(எஸ்.எம்.அறூஸ்)

ஊர் சமூகத்தினதும், மாவட்டத்திலுள்ள கட்சி ஆதரவாளர்களின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார் என ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்தின் ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாசல் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், விவசாய அமைப்புகள், ஸகாத் நிதியம், சமூக சேவை அமைப்புகள், ஜனாஸா நலன்புரி அமைப்பு, பிரதேச சபை தவிசாளர், இளைஞர் அமைப்புகள் என ஊர் சமூகம் ஒன்றினைந்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றிரவு (23) செவ்வாய்க்கிழமை பொத்துவில் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு ஊர் சமூகத்தின் பிரதிநிகள் கருத்துத் தெரிவித்தனர்.

பொத்துவில் மண் நீண்ட தியாகங்களுக்குப் பின்னர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அந்த மக்களுடைய பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகிறார் .

பொத்துவில் பிரதேசத்தில் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் உள்ள  சகல பிரதேசங்களிலும் தன்னுடைய பணியினை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார் .குறிப்பாக பொத்துவிலில் உள்ள காணிப் பிரச்சினைகளை அரசாங்க அதிகாரிகளுடன் பேசி அவற்றினை மக்களுக்கு  மீட்டுக் கொடுக்கின்ற வேலைகளை செய்துள்ளார்.

அதேபோன்றுதான் சம்மாந்துறை கரங்கா வட்டை,வட்ட மாடு காணிப்பிரச்சினை என்று விவசாயிகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் உளத்தூய்மையுடன் செயல்படுகிறார். 

இவ்வாறான பணிகளை செய்வதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிக அவசியம். அந்த வகையில்தான் இந்த பட்ஜெட்டுக்கு முஷாரப் எம்.பி ஆதரவு அளித்துள்ளார். இதனை பொத்துவில் மக்கள் மட்டுமல்ல அம்பாரை மாவட்டத்தில் உள்ள கட்சி ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக வரவேற்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கட்சியில் உள்ள சில சுயநலவாதிகள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மீது பொறாமை கொண்டு அவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு எம்பி அந்த மக்களின் கருத்துகளைக் கேட்டு பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் இதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் பட்ஜட்டுக்கு வாக்களித்து ஒரு சில மணித்தியாலயங்களில்  முஷாரப் எம்.பியை கட்சியிலிருந்து இடைநிறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .இது கவலைக்குரிய விடயமாகும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி ஆதரவாளர்களின் வேண்டுகோளை ஏற்றே பட்ஜட்டுக்கு ஆதரவளித்த முஷாரப் எம் பி எங்களுடைய கருத்துக்களை செவிமடுத்ததற்காக எமது உளப்பூர்வமான நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்சியில் உள்ள ஒரு சிலர் தான் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை அதற்கு காரணம் முஷாரப் அவர்கள் எம்.பியாக வந்ததில் அவர்களுக்குள் இருந்த பொறாமையாகும்.

ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டது போன்று முஷாரப் அவர்களை சந்தர்ப்பம் பார்த்து வெளியேற்ற முயற்சித்துள்ளார்கள் .

பொத்துவில் பிரதேசம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பெரும் கோட்டையாகும் அந்த கோட்டை இடிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம் அவர் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொள்வார் என நம்புகின்றோம் .

அந்தவகையில் முஷாரப் அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தம் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

பொத்துவில் பிரதேசம் தென் கிழக்கு பிரதேசத்தின் கடைக்கோடியில் உள்ளது இங்கு உள்ள பிரச்சினைகள் வித்தியாசமானது. காணிப்பிரச்சினை என்றும் கல்விப் பிரச்சினை என்றும் சுகாதாரப் பிரச்சினை என்றும் போக்குவரத்து பிரச்சினை என்றும் குடிநீர் பிரச்சினை என்றும் சொல்லொன்னா துயரங்களை எதிர்நோக்குகிறோம் .

கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகள் எமது மக்களை வாக்குகளுக்காக மாத்திரம் பயன்படுத்துகின்ற ஒரு நிலையை கண்டோம் .

எத்தனை வாக்குறுதிகளை கொடுத்தார்கள் எல்லாமே காற்றில் பறந்து போனது .ஆனால் எங்களுடைய நீண்ட கால கனவு ,தியாகம், காத்திருப்பு எல்லாவற்றுக்கும் கிடைத்த ஒரு பரிசுதான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகும் .

ஊரே சேர்ந்து எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்தோம் அதற்காக இந்த மாவட்டத்திலுள்ள சகல பிரதேசத்திலுமுள்ள கட்சி ஆதரவாளர்களும் எமக்கு வாக்களித்தார்கள். அந்த மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது மரியாதை கொண்டுள்ளார் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றார். 

ஆனால் அவருடைய தேர்தல் கால சித்தாந்தம் மக்கள் தலைவர் கட்சி என்பதாகவே இருந்தது மக்களுக்காக இவ்வாறான பிரச்சினைகளை முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கட்சித் தலைவர் ரிஷாட் அவர்கள் முஷாரப் எம்.பிக்கு  ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் .

மாறாக சுயநலவாதிகளின் கருத்துக்களை கேட்பதை விட்டு விட்டு கட்சி என்ற போர்வையில் எம்.பிக்களையும்அரவணைத்துச் செல்லுகின்ற நிலைக்கு அவரும் மாறவேண்டும்.

இந்த அரசாங்கம் பட்ஜட்டிற்கு முஷாரப் வாக்களித்ததன் நன்மையாக  பொத்துவில் பிரச்சினைகளை அரசாங்கத்திடமிருந்து மென்மையான போக்குடன் நிறைவேற்றிக் கொள்ளலாம் என பெரிதும் நம்புகிறோம் என்றனர்.

பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ் அப்துல் வஹாப். பொத்துவில் ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏ.ஆதம் லெப்பை மௌலவி, விவசாயிகள் அமைப்பின் தலைவர் எம்.எம் ஹஸன் ஹாஜியார். பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் அப்துல் றஹீம் மற்றும் ஏ எல் ஹமீட் மௌலவி, முகைதீன் பாவா மௌலவி ஆகியோர்கள் ஊர் சமூகத்தின் சார்பில் உரையாற்றினர்.





மக்களின் ஏகோபித்த தீர்மானமே முஷாரபின் ஆதரவாகும் - ஊர் சமூகம் கருத்து மக்களின் ஏகோபித்த தீர்மானமே முஷாரபின் ஆதரவாகும் - ஊர் சமூகம் கருத்து Reviewed by Editor on November 24, 2021 Rating: 5