இராஜாங்க அமைச்சரினால் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கு அமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி , வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (24) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி , வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த அமைச்சின் செயலாளர் கலாநிதி. திரு.அமல் ஹர்ச டீசில்வா, மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி.கைலேஸ்வரன், மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

 "எமது அமைச்சு மூலம் பின்தங்கிய பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறை சார்ந்து நிறைய சேவைகளை செய்துவருகிறோம். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இது எவ்வித பாகுபாடுமின்றி சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச் சேவைகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். வடமத்திய மாகாணத்தை அடுத்ததாக பெரிய நிலப்பரப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் காணப்படுகிறது. இம் மாகாணங்களில் நீர்ப்பாசனத்தை சரியாக பேணுவதன் மூலம் மூன்று விவசாய போகங்களையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதனூடாக எமது சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனக்குறிப்பிட்டதோடு, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நஞ்சற்ற உணவுகளை வழங்குதலிற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அதிக கரிசனை எடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது,

அரசின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு ஊடாக இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் மக்களுடைய வாழ்வில் சுபீட்சம் அதிகரிக்கும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உழுந்து,பயறு விதை பொதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இச்சந்தர்ப்பத்தை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்தல் வேண்டும். மேலும், விவசாயிகள் பல பிரச்சனைகளிற்கு உள்ளாகுவதனால் அரசு பல மானியங்கள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.






இராஜாங்க அமைச்சரினால் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சரினால் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு Reviewed by Editor on November 24, 2021 Rating: 5