சேதனப் பசளை பொதியிடல் மத்திய நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம் நடத்தப்படுகின்ற அநுராதபுரம் - ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப் பசளைப் பொதியிடல் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) புதன்கிழமை பிற்பகல் பார்வையிட்டார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம், வடமத்திய மாகாணத்தில் 35 நிலையங்களில் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுகின்றது. அதற்காக, நீர் பதுமராகம், சீமைக்கிளுவை (கிளிரிசிடியா), கோழிக்கழிவுகள், காயவைத்த மாட்டுச்சாணம் மற்றும் எப்பாவல ரொக் பொஸ்பேட் என்பன மூலப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்போகத்துக்காக 50,000 மெட்ரிக் தொன் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது. 

அநுராதபுரம் - ஒயாமடுவ, சேனாநாயக்க மாவத்தை, பதவிய, மஹா இலுப்பல்லம, எப்பாவல மற்றும் தலாவையில் அமைந்துள்ள 06 மத்திய நிலையங்களில் பசளை பொதியிடப்பட்டு, கொமர்ஷல் உர நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றது. அதன் பின்னர், கொமர்ஷல் உர நிறுவனமானது, கமநலச் சேவைத் திணைக்களத்தின் ஊடாக, விவசாயிகளுக்கு சேதனப் பசளையை விநியோகிக்கின்றது.

இந்த சேதனப் பசளையை, ஒரு ஹெக்டெயார் வயல் நிலத்துக்கு ஒரு மெட்ரிக் தொன் அளவில் பயன்படுத்த முடியும். பசளை உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தரம் பற்றி, பொதியிடல் மத்திய நிலையம் அல்லது உற்பத்தி நிலையங்களின் ஊடாக அறிந்துகொள்ள, விவசாயிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. 

ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பசளைப் பொதியிடல் மத்திய நிலையத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட பசளையின் தரம் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். 

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட பலர், ஜனாதிபதி அவர்களுடன் இக்கண்காணிப்பு விஜயத்தில் இணைந்துகொண்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







சேதனப் பசளை பொதியிடல் மத்திய நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி சேதனப் பசளை பொதியிடல் மத்திய நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி Reviewed by Editor on November 18, 2021 Rating: 5