உணர்ச்சிக்கு உரம்கொடுத்து, விஞ்ஞானத்தை குழிதோண்டிப் புதைத்ததனால், ஒரு சமூகம் நிர்க்கதியானதன் கதை -புலனாய்வுக் கட்டுரை

 (என். முஹம்மது சப்னாஸ்)


வேறு தொழில் மேற்கொள்வதா அல்லது மீண்டும் மத்திய கிழக்கிற்கு செல்வதா என எண்ணுகின்றேன் என்கிறார் அம்பாரை காசிம் ஹோட்டலை நடத்திய பர்சித்.


தனது சகோதரர் பரீட் உடன் சேர்ந்து பர்சித் அந்த கடயை நடத்தும்  போதே கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டதாக 2018.02.26ஆந் திகதி புரளியை ஏற்படுத்தி இன்னுமொரு சமூகத்தின் மீது அடர்ந்தேறி, கலவர பூமியாக அம்பாரையை மாற்றினர் .


அந்த சம்பவம் இடம்பெற்ற பின் அங்கு தொழிலினை தொடர்வதற்குரிய உள ரீதியான தைரியம் இருக்கவில்லை, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட இழப்புகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு எனது சகோதரரின் உணவகம் எனது சொந்த ஊரான இறக்கமத்தில் இருந்ததது, அதில் நான் வேலை செய்தேன். அங்கு வேலை செய்யும் பொழுது முஸ்லிம் மக்களே, என்னை ("இப்போதும் மாத்திரைகள் போடுகிறீர்களா ; ரொட்டிக்குள் என்ன இருக்கிறது”) நகைச்சுவையாக கலாய்க்கத் தொடங்கினர். அவர்களின் எண்ணங்களில் நகைச்சுவையாக இருந்தாலும் எனது உள்ளத்தை அது பாரதூரமாக பாதித்தது என்பதனை அவர்கள் யாரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதே இன்னும் வேதனையாகவுள்ளது.


இதனாலே நான் வெளிநாட்டுக்கு தொழில் செய்ய சென்றேன். அங்கும் இந்த பிரச்சினை என்னை விடுவதாகவில்லை. இது சார்ந்த வீடியோக்களை காட்டி கிண்டல் செய்யத்தொடங்கினர், அதனாலும் நான் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம்.


தற்சமயம் நான் நாடு திரும்பியுள்ள நிலையில், ஒரு கடையை திரும்பவும் எனது ஊரில் திறக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இவ்வாறான பேச்சுக்கள் மீண்டும் எழுமா, இந்த சமூகத்தின் ஆதரவுத்தளம் என்னை பொருளாதார ரிதியில் உயர்த்திவிடுமா என்கிற கேள்வி பலமாக எழத்தொடங்கிற்று என்கிறார் பாசித்.



அம்பாறை ஹாசிம் ஹோட்டலில் இடம்பெற்ற கலவரமும் அது இடம்பெற்றதற்கான பின்னணியையும் உற்று நோக்கிப் பார்த்தோமேயானால்.சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களின் கடைகளில் கருத்தடை செய்யக்கூடிய மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள் மற்றும் மாற்று மதத்தவர்களின் இனப்பெருக்கத்தை குறைக்க முயற்சிக்கின்றனர் எனும் புறம்பலான கருத்து இருந்தது.

இதை ஆய்வு செய்து பார்க்கையில் அது உண்மையான ஒரு விடயம் அதன் விளைவாகத்தான் இந்த ஹாசிம் ஹோட்டல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.அவ்வாறான பிளையான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பார்த்த நபர் ஒருவர் ஹாசிம் ஹோட்டலில் அவர் உண்ண வழங்கப்பட்ட உணவில் ஏதோ வெள்ளை நிறத்தில் கண்டு அதனை தவறாக புரிந்து கொண்டு பெரிய பிரச்சினையாக உருவாக்கப்பட்டுள்ளது.


இதனை அல் ஜெசீரா ஊடக நிறுவனம் நிரூபித்துள்ளது [ https://www.aljazeera.com/news/2018/3/14/did-sri-lankas-facebook-ban-help-quell-anti-muslim-violence ]அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை உலுக்கிய கொடிய இனவாத அமைதியின்மைக்கு பேஸ்புக் மன்னிப்புக் கோரியுள்ளது. விசாரணையில் வெறுப்பு பேச்சு மற்றும் மேடையில் பரப்பப்பட்ட வதந்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. மற்றும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை உலுக்கிய கொடிய இனவாத அமைதியின்மைக்கு பேஸ்புக் மன்னிப்புக் கோரியுள்ளது[ https://www.aljazeera.com/news/2020/5/13/sri-lanka-facebook-apologises-for-role-in-2018-anti-muslim-riots ] . விசாரணையில் வெறுப்பு பேச்சு மற்றும் மேடையில் பரப்பப்பட்ட வதந்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.


2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முஸ்லீம் எதிர்ப்பு கோபம் சமூக ஊடகங்களில் கிளப்பப்பட்டதால் கலவரம் வெடித்தது, இலங்கை அரசு அவசரகால நிலையை விதித்து பேஸ்புக்கிற்கான அணுகலை தடை செய்தது.

அமைதியின்மைக்கு முன்னர், பேஸ்புக் அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றத் தவறிவிட்டது என்று ஆலோசகர்கள் பரிந்துரைத்தனர், இது சமூக வலைத்தளங்களில்"வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பிற வகையான துன்புறுத்தல்கள் எஞ்சியிருக்கும் மற்றும் பரவுகிறது".


ஆகவே இந்த கலவரம் ஒரு பொய்யான செய்தியின் பிரதிபலிப்பே ஆகும்.


மற்றும் இந்த உணவகத்தில் நடைபெற்ற சம்பவம் எல்லோரும் அறிந்த விடயமே ஆனால் இந்த பிரச்சினை ஒரு தனி நபரையோ, ஒரு தனிப்பட்ட இடத்தையோ பாதிக்கவில்லை இது ஒரு சமூகத்தை பாதித்துள்ளது அச்சமூகத்தின் வணக்கஸ்தலம் சேதமாக்கப்பட்டது.  


விடயம் தொடர்பில் குறித்த பள்ளிவாசல் தலைவரிடம் வினவியபோது, அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.


குறித்த பெரும்பான்மை குழுவினர் உணவகத்தை தாக்கியதோடு விட்டு விடாமல் எங்கள் பள்ளிவாசலிலும் அத்துமீறி நுழைந்தனர், அவ்வாறு நுழைந்தவர்கள் முதலில் பள்ளிவாசல் மதிலை முற்றாக உடைத்தெறிந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள், கதவுகளை உடைத்து பள்ளிவாசலுக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்தினர். இவற்றுடன் நிறுத்திவிடாது, புனித அல்குர்ஆன் பிரதிகள் உட்பட பல சமயம் சார்ந்த நூல்களையும் தீயிட்டு எரித்தனர். மேலும் பள்ளிவாசலுடன் இணைந்ததாக அமைந்திருந்த பள்ளிவாசலின் நிர்வாக காரியாலயத்தையும், பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி, அந்த கட்டிடங்களையும் சேதப்படுத்தினர். இதனால் அந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்கும், ஏனைய பாதுகாப்பான இடங்களுக்கும் தப்பி ஓடினார்கள்.மேலும், பள்ளிவாசலில் நடந்தேறிய இவ் வன்முறை சம்பவத்தில், பள்ளிவாசல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான வேன், 2 லொறிகள் , 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்பட்டடும் தீ வைத்தும் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதில் வேனும் மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஆகவே, இந்த சம்பவத்தால் பாரிய ஒரு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த ஹோட்டலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒரு பிழையான மோசமான நிகழ்வு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டதாக சொல்லப்பட்டு ஒரு சிறுபான்மை சமூகத்தின் மீதான அடர்ந்தேறலின் பின்னர் சர்வேதசம் தனது கவனத்தை செலுத்தி கீழ்வரும் அறிக்கையினையும் வெளியிட்டது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி உலக சுகதார ஸ்தாபகம் , UNFPA மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் இவ் விடயத்தை முற்றாக கண்டிக்கின்றது.


இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான தவறான தகவல்களில் இருந்து உருவான அம்பாறை சம்பவம் தொடர்பாக, இங்கு கூட்டு அறிக்கை தவறை தெளிவுபடுத்தும் வகையில் மறுஆய்வு செய்யப்பட்டது.

அந்த கால பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உலக சுகாதார ஸ்தாபகத்தின் பிரதிநிதி Dr. ரெய்சா பென்பஸ் கூறுகையில், "ஒரு மனிதனை முழுமையாக மலட்டுத்தன்மை மிக்கவராக மாற்றுவதற்கு இதுவரை எந்த மருந்தும் உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், அந்தவகையில் உணவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய மருந்து கலந்துள்ளது என்ற விடயம் விஞ்ஞான ரீதியாக ஆதாரமற்றது" எனவும் குறிப்பிட்டார்.


மற்றும் UNFPA பிரதிநிதி MS.றிட்சு நாதன் கூறுகையில், "இளைஞர்களுக்கு மத்தியில் இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இவ்வாறான இனப்பிரச்சினைகளோ அல்லது பொய்யான தகவல்களினால் ஏற்படும் பிரச்சினைகளோ ஏற்படுவது குறையும்".என குறித்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.


மற்றும் UNS உடன் உலக சுகாதார ஸ்தாபகம் மற்றும் UNFPA அதிகாரிகள் என்பவர்களினால் அனைத்து குடி மக்களையும், தவறான தகவல்களை எதிர் கொள்ளச் செய்யக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், மேலும் அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுதல் அவசியம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    


எனவே அவ்வாறு,ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார ஸ்தாபகம் ,மற்றும் UNFPA அமைப்புகள் தமது அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, எமது நாட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்ட தகவல் முற்றிலும் தவறான ஒரு தகவலாகும்.


மேலும் இப் பிரச்சினையின் தற்போதைய நிலமை பற்றி , அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக வியாபாரம் மேற் கொள்பவரும், குறித்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் காசீம் ஹோட்டலை நடாத்தியவர்களுக்கு, அதனை வாடகையின் நிமிர்த்தம் வழங்கியவருமான, காத்தான்குடியை சேர்ந்த பர்சாத் அவர்கள் கூறுகையில் " குறிப்பாக அம்பாறை கலவரம் தொடர்பான எனது பார்வையானது அக் கலவரத்தை ஏற்படுத்திய நபர் அன்றைய தினம் குடி போதையில் இருந்ததாகவும், இதற்கு பின்னால் பல சதிகள் இருப்பதாக கூறப்பட்ட போதிலும், அன்றைய தினம் அக்கடையில் இருந்தவர்கள் அந்த பெரும்பான்மை இளைஞரின் கேள்விக்கு, சிங்கள மொழியில் சரியாக பதில் கூறாமையின் விளைவாகவே இக் கலவரம் ஏற்பட்டதாக நான் கருதுகிறேன் என்றார்.


இருப்பினும் இக் கலவரம் நடைபெற்று மூன்று வருடங்களாகியுள்ள நிலையில் இவ் இடத்தின் இன்றைய நிலையை பார்க்கும் போது, குறித்த கலவரத்தினால் பிரதானமாக பாதிக்கப்பட்டவை, காசீம் ஹோட்டல் உட்பட மூன்று உணவகங்களும், பள்ளிவாசலும் மற்றும் பள்ளிவாசல் சார்ந்த சில சொத்துக்களுமாகும். இவற்றிற்கு அக் காலத்திலேயே நஷ்ட ஈடுகள் பதியப்பட்டு ஒரு சிலருக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன.


அம்பாறையில் உள்ள சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அக் காலத்தில் நெருங்கிய உறவு காணப்பட்டது. ஆதலால் குறித்த சம்பவத்தை பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஒரு விபத்தாகவே கருதினர் எனலாம். இந் நிலையில், இன்றைய கால கட்டத்தில் குறித்த சம்பவம் மறக்கப்பட்டு, மீண்டும் கடைகளெல்லாம் திறக்கப்பட்டு சகல மக்களும் சுமுகமான வாழ்க்கையை நடாத்தி செல்கின்றனர்.


சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் மக்களின் அன்னியோன்யம் குறைந்து காணப்பட்ட போதிலும் தற்போது அந்நிலை முழுமையா மாற்றமடைந்துள்ளது என்றார். அதற்கு உதாரணமாக ஒரு சில விடயங்களையும் எமது அவதானத்திற்கு கொண்டுவந்தார் பர்சாத்.


அம்பாறை நகர் என்பது இந்த மாவட்டத்தின் இதயம் , மிக முக்கியமான அரச நிறுவனங்கள் இங்குதான் உள்ளது. அந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அநேகம்பேர் முஸ்லீம்கள். எனது உயர் அதிகாரிகூட ஒரு முஸ்லிம் . 2018.02.26இல் ஏற்பட்ட களங்கத்தை துடைப்பது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லலை. அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம். ஒவ்வொரு சமூகத்திலும் அச்சமூகத்திற்கு இழி பெயரை ஏற்படுத்துவோர் இல்லாமலில்லை. அப்படி ஒரு கூட்டத்தின் விளைவே இது என்றார் நிஷாந்த செனவிரத்ன( பெயர் மாற்றப்பட்டுள்ளது)


பழுதடைந்த நிலையில் இருந்த பள்ளிவாசலின் சுவர்களை உடைத்ததனால் தற்போது புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம்.


ஆகவே, அன்று நடைபெற்ற சம்பவத்தால் தற்போது பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் விரிசலான ஒரு நிலை நிலவுவதாக கூற முடியாது என்கிறார் அம்பாரையில் வசிக்கும் மலாயர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர்.


எல்லோரும் இப்போது பரஸ்பர ஒற்றுமையாக செயற்படுவதை காண முடிகின்றது. மேலும் இச் சம்பவம், அம்பாறையில் வியாபாரங்களை மேற்கொள்ளும், தொழில்களுக்கு வந்துசெல்லும் அத்துடன் அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு எவ்வித தொல்லையையோ இடையூறையோ அச்சம்பவத்தின் பின்னர் யாரும் ஏற்படுத்தவில்லை.


மேலும் பள்ளிவாசலுக்கும் 24 மணிநேரமும் பொலிஸ் அதிகாரிகளால் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதனால் பள்ளிவாசல் பற்றி எங்களுங்கு எந்தவித அச்சமும் இல்லை என்றார் அவர்.


குறித்த சம்பவம் இடம்பெற்று மூன்றுவருடங்கள் கடந்துள்ள நிலையில் பல ஊடகங்களும் பல கோணங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் சேகரிக்கத் தொடங்கினர். இதனால் சம்பவம் நிகழ்ந்த அக்காலப்பகுதியில் ஊடகங்களுக்கு வழங்கிய ஒத்துழைப்பினை அவர்கள் அதே உத்வேகத்தோடு வழங்குவதற்கான மன உறுதியோடு இருக்கவில்லை. அத்துடன் இன்னும் சிலர் தாங்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்தினை பகிர்ந்துகொள்வோம் ஒரு நிபந்தனை எங்களை அடையாளப்படுத்தக்கூடாது என்கிற ஒப்புதல்களையும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இதில் இருந்து விளங்கிக் கொள்ள முடிவது என்னவென்றால், இப்போது அம்பாறை பகுதியில் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர் மற்றும் காசிம் ஹோட்டலின் உரிமையாளர் சொல்கிறார் அந்த கலவரத்தின் பின் சிங்கள மக்கள் வீடு தேடி வந்து நன்றி கூறியதாக.

எனவே அம்பாரை கலவரம் என்பது இது பிழையான புரிந்துணர்வால் ஏற்பட்ட கலவரம்.

இரு சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் விதைத்து முடிவுற்றுள்ளது அம்பாரை கலவரம். என்னதான் கலவரம் முடிந்து, ஒற்றுமை பிறந்தாலும் அந்த கலவரத்தின் ஆரம்ப இடமான ஹோட்டல் முதலாளி மற்றும் அந்நேரத்தில் கொத்துரொட்டி வேலை செய்த தொழிலாளி ஆகியோர் இன்றும், தனது ஜீவனோபாயமான உணவகத் தொழிலை செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். ஆகவே இவ்வாறான கலவரங்கள் மக்களிடையே, ஒற்றுமையை சீர் குழைப்பது மட்டுமன்றி தனி நபர்களையும் பாதிக்கின்றது.

இவ் இலங்கை திருநாட்டின் அழகே, பல் கலாசாரம் தான். பௌத்த, இந்து, முஸ்லீம் என பிரித்து பார்த்தது போதும்.எமது பலம் ஒற்றுமையே! அதனை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்ப்போம்.


( இந்தக் கட்டுரை, புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு,புலனாய்வு அறிக்கையுடலுக்கான நிலையம் - CIR, நடத்திய பயிற்சி நெறியை அடுத்து,அந்நிலையத்தினால் வழங்கப்பட்ட அனுசரணையின் கீழ் எழுதப்பட்டது )



உணர்ச்சிக்கு உரம்கொடுத்து, விஞ்ஞானத்தை குழிதோண்டிப் புதைத்ததனால், ஒரு சமூகம் நிர்க்கதியானதன் கதை -புலனாய்வுக் கட்டுரை உணர்ச்சிக்கு உரம்கொடுத்து, விஞ்ஞானத்தை குழிதோண்டிப் புதைத்ததனால், ஒரு சமூகம் நிர்க்கதியானதன் கதை -புலனாய்வுக் கட்டுரை Reviewed by Editor on November 16, 2021 Rating: 5