தேசிய காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூரின் முயற்சி வெற்றியளித்தது

(பக்கீர்சேனையான்)

வரலாற்று சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசலின்  வருடாந்த கொடியேற்று விழாவானது  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அதிவிசேஷ வர்த்தமானப் பத்திரிகையில் அரசாங்க அறிவித்தலாக திங்கட்கிழமை  (20) வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 ஆவது வருடாந்த கொடியேற்று விழா - 2022 என தலைப்பிடப்பட்டு மும்மொழிகளிலும் வெளியாகிய வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 ஆவது வருடாந்த கொடியேற்று விழாவானது 2022 ஜனவரி மாதம் 04 ஆந் திகதி முதல் 2022 ஜனவரி மாதம் 16 ஆந் திகதி வரை நடைபெறும் என்பதை பொது மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இத்தால் அறிவிக்கபடுகின்றது என்பதுடன் யாத்திரைகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க 1963 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 22 ஆந் திகதிய 13529 ஆம் இலக்க இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் யாத்திரைக் காலத்தில் அமுலில் இருக்கும் என்பதை பொது மக்களின் கவனத்திற்காக அறியத்தருகின்றேன்  என குறிப்பிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக்கடல் குத்புல் அக்தாப் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் நினைவாக வருடா வருடம் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில்   நடைபெற்று வரும்  புனித  கொடியேற்று விழாவினை  அரச வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடுமாறு வேண்டியும்  மற்றும் கொடியேற்று விழாவினை  வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல்  விடுப்பதற்கான உரிய அரச நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் அண்மையில் கல்முனை பிரதேச செயலாளரிடம் கையளித்ததுடன் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்முனை பிரதேச செயலாளர் தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூரிடம்  உறுதியளித்திருந்தார். இதேவேளை அரச வர்த்தமானப் பத்திரிகையும் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் புனித கொடியேற்று விழாவினை  அரச வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத்தினர்  மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர்  தெரிவித்துள்ளார்.







தேசிய காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூரின் முயற்சி வெற்றியளித்தது தேசிய காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூரின் முயற்சி வெற்றியளித்தது Reviewed by Editor on December 23, 2021 Rating: 5