லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

“மாகம் ருஹுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக” வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட இக்களஞ்சிய வளாகத்தின் நிர்மாணப் பணிகளை குறிக்கும் வகையில் கௌரவ பிரதமரினால் நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஷென்ஹொங் உள்ளிட்ட குழுவினருடன் துறைமுக வளாகத்தில் காண்காணிப்பு விஜயம்மொன்றை மேற்கொண்டார்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தில் உள்ள பல் கல சரக்கு பரிமாற்றல் நடவடிக்கை பிரிவிற்கு (Ro Ro operations) விஜயம் செய்த கௌரவ பிரதமர் அங்கு நடைபெறும் வாகன மீளேற்றல் செயற்பாட்டை கண்காணித்தார்.

இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் ஐந்து இலட்சம் வாகனங்கள் அப்பிரிவினால் கையாளப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ அவர்கள் கௌரவ பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் சென்னை, முந்த்ரா, எனோர், தென்கொரியாவின் குன்சான், பியொங்டெக் மற்றும் ஜப்பானின் ஒசாகா, கொபே மற்றும் நகோயா ஆகிய துறைமுகங்களிலிருந்து பரிமாற்றல் நடவடிக்கைக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் கொண்டு வரப்பட்டதுடன், தென்னாபிரிக்காவின் டர்பன், மெக்சிகோவின் வெரக்ரஸ், அமெரிகாவின் சென் அன்டோனியோ, நெதர்லாந்தின் ரொடர்டேம் மற்றும் பிரான்சின் லே ஹெவரே ஆகிய துறைமுகங்களுக்கு இவ்வாகனங்கள் மீளேற்றப்பட்டன.

துறைமுக வளாகத்தில் உள்ள கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்படும் ஷென்ஷென் ஷின்ஜி குழுமத்திற்கு (Shenzhen Xinji Group) சொந்தமான “பிரினிமி” (Plug and Play) “மண்டலத்தினுள் மண்டலம்” (Park in Park) எனும் எண்ணக்கருவில் செயற்படுத்தப்படும் மின்னணு சாதன உற்பத்தி வலயம் மற்றும் சிலோன் டயர் உற்பத்தி தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் டயர் உற்பத்தி தொழிற்சாலை வளாகம் கௌரவ பிரதமரின் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது.

டயர் உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைக்கான மூலப்பொருட்களும், மனித வளமும் உள்நாட்டிலிருந்தே பெறப்படுகின்றன. 55.8 ஹெக்டேயர் பரப்பளவிலான டயர் உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை முறைமுகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ அவர்களினால் கௌரவ பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் லுணுகம்வெஹெர கிராமத்தினை “எதிர்பார்ப்பின் கிராமமாக” அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் அரச பத்திரம் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ ஆகியோரிடையே பரிமாற்றிக் கொள்ளும் செயற்பாடும் இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ, தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் U.D.C.ஜயலால், துறைமுக அதிகாரசபையின் தலைவர் நிஹால் கெப்படிபொல, களம்பு லொஜிஸ்டிக் குழுமத்தின் தலைவர் எரிக் அம்பலங்கொடகே உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.







லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள்  ஆரம்பம் Reviewed by Editor on December 14, 2021 Rating: 5