எமது பிரதேச எல்லைக்குள் நடைபெறும் பணிகளை நிறுத்த அட்டாளைச்சேனை தவிசாளருக்கு அதிகாரம் இல்லை - உபதவிசாளர்

(றிஸ்வான் சாலிஹு)

இறக்காமம் பிரதேச எல்லைக்குள் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை இடை நிறுத்தும் அதிகாரம் அட்டாளைச்சேனை தவிசாளருக்கு இல்லை என்று இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் அஷ்ஷேக் ஏ. எல்.நௌபர் தெரிவித்துள்ளார்.

கெளரவ உபதவிசாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மிக நீண்ட காலமாக இறக்காமம் 7ஆம் பிரிவில் உள்ள அரபா நகர் ஹாஜியார் புரத்தில் வசித்து வரும் மக்கள் குடிநீர் இன்றி கஷ்டப்படுவதை அறிந்த, இறக்காமம் பிரதேச சபை அந்த மக்களுக்கான குடிநீர் வசதியை அவசரமாக செய்து கொடுக்கும்  தீர்மானத்தை  நிறைவேற்றி  அதன் ஆரம்ப  கட்ட வேலை சென்ற 16ஆம் திகதி இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம். எஸ் ஜெமில் காரியப்பர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்தை  கடந்த 22.12.2021 அன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அமானுள்ளாஹ் அவர்கள்  தடுத்து நிறுத்த முற்பட்டமை மிகவும் மன வேதனையை தருகிறது. 

இறக்காமம் பிரதேச எல்லையை, பிரதேச சபையை பெற்றுக் கொள்வதில்  சுமார் 30 வருடம் காலமாக இறக்காமம் மக்கள் செய்த தியாகங்கள், எதிர்கொண்ட சவால்களை, நாங்கள் இலகுவாக மறந்து விட முடியாது. 

2009ஆம் ஆண்டு வர்த்தமானியில்  குறிப்பிடப்பட்டுள்ள எல்லை கோடுகளை தாண்டி, இறக்காமம் 7ஆம் கிராம சேவகர் பிரிவில் உள்ள அரபா நகர் என அழைக்கப்படும் ஹாஜியார் புரத்தை அட்டாளைச்சேனைக்கு சொந்தமான றஹ்மத் நகர் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. 

'இறக்காமம்' அம்பாரை மாவட்டத்தில் உருவான முதலாவது  முஸ்லிம் ஊராகும், மிக நீண்ட காலமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்துடன் இணைந்து இருந்தாலும் அரசியல் அதிகாரம் ஒன்று இல்லாத காரணத்தினால் இறக்காமத்தின் அனைத்து வளங்களும் சுற்றி இருந்த (அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை) அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் மிக மோசமான முறையில் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இந்த அபகரிப்பு ஒட்டு மொத்த இறக்காமத்து மக்களும்  தங்களது  வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் அவல  நிலையை உருவாக்கி உள்ளது என்பதை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் உட்பட, அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும்.

எமக்கு அரசியல் அதிகாரம் இல்லா விட்டாலும், நீதித்துறை எங்களை கைவிடாது என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிப்போம் என்று கெளரவ உபதவிசாளர் ஏ.எல்.நௌபர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எமது பிரதேச எல்லைக்குள் நடைபெறும் பணிகளை நிறுத்த அட்டாளைச்சேனை தவிசாளருக்கு அதிகாரம் இல்லை - உபதவிசாளர் எமது பிரதேச எல்லைக்குள் நடைபெறும் பணிகளை நிறுத்த அட்டாளைச்சேனை தவிசாளருக்கு அதிகாரம் இல்லை - உபதவிசாளர் Reviewed by Editor on December 31, 2021 Rating: 5