அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி

நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவதால் தொடரப்போகும் தொழிற்சங்க நடவடிக்கைகளால் மக்கள் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடி நிலைகளுக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்பில் அருவி இணையத்துக்கு கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கிளைச் செயலாளர் வைத்தியர் வி.தர்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடமாற்ற சபையின் அனுமதியின்றி விசேட வைத்திய நிபுணர்களின் இடமாற்ற பட்டியலை வெளியிடுதல், உள்ளக பயிற்சியை நிறைவு செய்து வைத்திய நியமனத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நியமன பட்டியலை வெளியிடுதல், தர அடிப்படையிலான வைத்தியர்களுக்கான இடமாற்றங்களை திகதிகளை அமுலாக்கும் திகதிகளில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு வழங்காமை, சரியான பங்காளிகளை ஆலோசிக்காமல் மருத்துவ சேவை யாப்பு மாற்றப்பட்டமை, தேசிய சம்பள கொள்கையை பாதிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகின்றமை உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இடமாற்ற சபையில் வைத்திய அதிகாரிகள் சங்கமே எந்த எந்தப் பகுதிகளில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுகிறது, எவ்வாறான சிக்கல்கள் உள்ளன போன்ற விடயங்களை இதுவரை தெரியப்படுத்தி வந்தது. இருந்தபோதிலும் நியமனங்களின்போதோ நடவடிக்கைகளின் போதே இடமாற்ற சபையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தை புறக்கணித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல் தனிப்பட்ட அடிப்படையில் சுகாதார அமைச்சு நியமனங்களை மேற்கொள்கின்றது.

இதனால் பல நெருக்கடிக நிலைகள் தொடந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் நிலவிய சிக்கல்கள் இந்த ஆட்சிக்காலத்திலும் மாற்றமின்றி தொடர்வது பாரிய சிக்கலாக காணப்படுகிறது.

இவற்றை முன்வைத்தே மன்னார், திருகோணமலை உட்பட்ட ஐந்து மாவட்டங்களில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சுத் தரப்பினால் எந்தவித ஆக்கபூர்வமான கருத்துக்கள் கூட முன்வைக்கப்படாத நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாடு முழுமையிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் வரையறுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் 03 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இருந்தபோதிலும் அவசர சிகிச்சைகள், குழந்தை நல மருத்துவ நடவடிக்கைகள், மகப்பேற்று மருத்துவ நடவடிக்கைகள், சிறுவர் மருத்துவ நடவடிக்கைகள், புற்றுநோய் மருத்துவ நடவடிக்கைகள், கொவிட் மருத்துவ நடவடிக்கைகள், விசேட மருத்துவ நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

எமது போராட்டத்தில் மனித நேயத்தின் அடிப்படையில் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத வகையில் வெளிநோயாளர் பிரிவு மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் கிளினிக் மருத்துவ நடவடிக்கைகளை மட்டும் புறக்கணித்து போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்.

நாம் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைளில், சுகாதார அமைச்சின் செயலாளரின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் தீர்க்கக் கூடிய ஐந்து கோரிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றினை சுகாதார அமைச்சு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் ஏனைய இரண்டு கோரிக்கைகள் குறித்து பேச்சுக்கள் ஊடாக தீர்ப்பதற்கான சாத்தியப்பாடுகள் கூடக் காணப்படுகின்றன.

எமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பிலான அடுத்த கட்டச் செயற்பாடு தொடர்பில் நாளை கொழும்பில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தற்போதைய நிலையில் குறித்த போராட்டத்தினால் மக்களுக்கு சிறிய அளவிலான பாதிப்புக்களே நிலவுகின்றன. தொடர்ந்தும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு போராட்டங்கள் தொடர்ந்தால் மக்கள் கூடுதலான பாதிப்புக்களைச் சந்திக்க நேரிடும். குறித்த நெருக்கடிளுக்கு சுகாதார அமைச்சே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்



அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி Reviewed by Editor on December 24, 2021 Rating: 5