பொத்துவில் நடைபெற்ற காணி உத்தரவுப் பத்திரம் வழங்கல்

நாட்டை கட்டியெழுப்பும் "சௌபாக்கியத்தின் நோக்கு" தேசிய கொள்கை திட்டத்திற்கு அமைய காணி அளிப்பு பத்திரம் மற்றும் உத்தரவுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (25) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின்  அழைப்பில், காணி அமைச்சர் கௌரவ எஸ். எம். சந்திரசேன அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். 

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளுக்கான அளிப்புப் பத்திரம் மற்றும் உத்தரவுப் பத்திரங்கள் முதற்கட்டமாக  75 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

பொத்துவில் பிரதேசத்தில் அளிப்பு பத்திரம் மற்றும் உத்தரவுப்பத்திரம் இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அவர்கள் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரையாற்றிய, காணி அமைச்சர் கௌரவ. எஸ்.எம்.சந்திரசேன,

பொத்துவில்  பிரதேசத்தில்  காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைத்து மக்களுக்கு அவற்றினை சட்டரீதியாக பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள், என்னை அடிக்கடி சந்தித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் தீர்வைப் பெற்றுத் தருமாறு தொடர்ச்சியாக வேண்டிக் கொண்டுள்ளார்.

இவ்வாறான அர்ப்பணிப்புடன் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினரை நான் பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்நிகழ்வில் வனவிலங்கு ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ச, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் அப்துர் ரஹீம், பிரதேச செயலாளர் அனுருத்த சந்தரூபன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் மஜீத் மற்றும் காணி ஆணையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









பொத்துவில் நடைபெற்ற காணி உத்தரவுப் பத்திரம் வழங்கல் பொத்துவில் நடைபெற்ற காணி உத்தரவுப் பத்திரம் வழங்கல் Reviewed by Editor on December 26, 2021 Rating: 5