அதாஉல்லாவின் அரசியல் குறித்து தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், சில நிலைப்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாது - மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வுடைய அரசியல் குறித்து பல தனிப்பட்ட முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது சில நிலைப்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாது என்று அரசியல் விமர்சகர் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய இலங்கை ஒப்பந்தம் (29.07.1987) முஸ்லிம்களின் முதுகின் மீது எழுதப்பட்ட அடிமைச் சாசனம், வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விவகாரத்தில் மக்களபிப்பிராய வாக்கெடுப்பு முஸ்லிம்களை பலிக்கடாவாக்கும் சதி, அரசியல் தீர்விற்கான பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக உள்வாங்கப்பட வேண்டும், தமிழர்களின் அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் தடையாக இருக்கப் போவதில்லை ஆனால் முஸ்லிம்களது அபிலாஷைகளுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும் போன்ற மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களது நிலைப்பாடுகளில் அவரது மர்ம மரணத்திற்குப் பின்னரும் அதாவுல்லாஹ் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

கட்சித் தலைமைத்துவ சர்ச்சையில் இன்றைய தலைவரின் பலமான தூணாக  இருந்தாலும்  2002 ரணில் அரசு புலிகளுடன் செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு உடன்பாடு, மு.கா புலிகள் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது புலிகள் கட்டவிழ்த்து விட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அடாவடித்தனங்கள் போன்ற கசப்பான பாடங்களின் ஒளியில் ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை அதாவுல்லாஹ் எடுக்கிறார்.

இந்திய இலங்கை உடன்படிக்கை போன்று மு.கா தயவில் ஆட்சிக்கு வந்த ரணில் தலைமையிலான அரசு 2002.2.24 செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு உடன்பாடும் CFA முஸ்லிம்கள் முதுகில் வரையப்பட்ட கொத்தடிமை சாசனமே, நோர்வே மத்தியஸ்த்த பேச்சுவார்த்தைகளில்  முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கை மற்றும் அபிலாஷைகள்  அரசாலும் புலிகளாலும்  நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு தனி மாகாணமாக இருப்பதே முஸ்லிம்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை தரும் அங்கிருந்து தான் முஸ்லிம்களது அபிலாஷைகளை உள்வாங்கிய தீர்வு முயற்சிகள் முறையாக ஆரம்பிக்கப்பட்ட வேண்டும் இன்றேல் கிழக்கு கிழக்காகவே இருக்கட்டும் என்ற விடாப்பிடியான தனது நிலைப்பாட்டை எடுத்தார்.

தான் முன்னின்று கைகொடுத்த கட்சித் தலைமையுடன் முரண்பட்டதானால் கட்சியிலிருந்து 2003 ஆம் ஆண்டு விலக்கப்பட்டார்.

பின்னர் மூதூர் வாழைச்சேணை என புலிகளின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை தீவிரமடைந்த நிலையில் ஹரீஸ் அன்வர் இஸ்மாயீல் போன்றோரும் அதாவுல்லாஹ்வின் நிலைப்பாட்டை சரிகண்டு அதிருப்தியாளராகளாக களமிறங்கி மக்கள் முன் சென்றனர்.

எதிரணியிலிருந்த பெரியல் அஷ்ரஃப், சேகு இஸ்ஸதீன், மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்றோரும் மோதல் தவிர்ப்பு உடன்பாட்டிற்கு எதிராக கிழக்கில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்...

(துரோகிகள் முத்திரை யார் யாருக்கு யார் எவரால் குத்தப்பட்டது என்பதனை நாம் அறிவோம்)

இந்தக் காலகட்டத்தில் தான் கிழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் ஒலுவில் பிரகடனத்தை மேற்கொண்டார்கள்...

2005 மஹிந்த அரசு அமைந்த பொழுதும் அதாவுல்லாஹ் தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தார்..!

06.10.2006 அன்று ஜாதிக ஹெல உறுமய ஜே.வி.பி ஆகிய கட்சிகள் உயர்நீதி மன்றில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்..!

தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து இந்திய இலங்கை உடன்படிக்கை அமுலாக்கத்தில் இந்திய தலையீட்டை கோரும் ஆவணமொன்றில் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் காங்கிரஸ் ஆகியவை (முஸ்லிம் சிவில் சன்மார்க்க தலைமைகளை கலந்தாலோசிக்காமல்) கையொப்பமிட  முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆளும் எதிர்க்கட்சிகளின் பங்காளிகளாக இருந்து கொண்டு சமூகத்தையும் தேசத்தையும் ஏமாற்றும் அரசியல் நாடகங்கள் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்று தனது முகநூல் பக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






அதாஉல்லாவின் அரசியல் குறித்து தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், சில நிலைப்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாது - மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அதாஉல்லாவின் அரசியல் குறித்து தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும், சில நிலைப்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாது - மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் Reviewed by Editor on January 02, 2022 Rating: 5