மறைந்தாலும் மறக்கப்பட முடியாதவர் முன்னாள் எம்.பி எம்.ஐ.உதுமாலெப்பை

(ஐ.எல்.எம். தாஹிர்)

பொத்துவில் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை B.Com (Hons) மறைந்த செய்தியினை ஊடகங்கள் மூலமாகக் கேட்டு கடந்து விட்ட காலத்தின் அந்தத் துயரமான நாளை இப்போது நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் ஊடகங்கள் ஒலி, ஒளி பரப்பிக் கொண்டிருந்த மகிழ்ச்சியான வேளையில்தான் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை மறைந்த செய்தி தரணியெல்லாம் பேசப்பட்டன. 

நல்லதொரு கல்விமான், நாணயமான அரசியல்வாதி, பூவிலும் மெல்லிய புன் சிரிப்புடன் பாலும், பழமுமாய் பழகுகின்ற பண்பாளராகவும் திறமைப் பேச்சாளராகவும் விளங்கிய அன்னார் அக்கரைப்பற்றின் ஒளி விளக்காய் மிளிர்ந்த அகல் விளக்கானவர்.

'கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக' என்று வாழ்வாங்கு வாழ்ந்த பண்பான மனிதரான மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்கள் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தற்பொழுது தேசிய பாடசாலை) ஆக்கப்பாட்டுக்கு ஊக்கப்பாடளித்த கடின உழைப்பாழி என்பதுடன், அன்னார் மறைக்கப்பட்டாலும் மறக்கப்பட முடியாதவர்.

அக்கரைப்பற்று அன்னையின் மீது அக்கறை கொண்டு எக்கரை தொடங்கி எக்கரை வரையும் எங்கெங்கெல்லாம் மானிடர் உள்ளனரோ அங்கங்கெல்லாம் சேவை செய்த அன்பின் இதயம் இவர்.

கல்விப் பணியில் கடமை பார்த்துக் கண்ணியத்துடன் பல நிர்வாகப் பதவிகள் வகித்தவர் மட்டுமல்ல நம்பிக்கை நாணயத்துடன் நல் வழி கண்டு, நாள் தோறும் ஊர் மக்கள் நலனிலே உண்மைப் பற்றுதலை வேரூன்ற வைத்ததுடன் உயர் குணத்தினால் மக்கள் அபிமானம் பெற்றிருந்தவருமாவார்.

இன, மத பேதம், இரு கட்சிப் பேதங்கள் என்றில்லாது அனைவரும் சமம் என்ற அரும் பெரும் கொள்கையை அடிநாதகமாகக் கொண்டு அரசியல் வாழ்வில் புதுமைப் பித்தராய் விளங்கி பொத்துவில் தொகுதியின் உயர்ச்சிக்காய் ஏணி வைத்தவர்.

பகலுக்கும் இரவு எதிர்ப்பதுண்டு. ஆனால் எதிரிகள் இல்லாத மனிதராக மக்கள் மாண்பை மனதிலிறுத்தி மேம்பட்ட தன் மேன்மைக் குணத்தினால் பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மறைந்த அமரர் திரு.ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அலங்கரித்து அத்தர் வாசனையை அதிகம் கமழச் செய்தவர்.

ஊர்ப் பேதம், உறவுப் பேதமற்று அதிக பட்ச சமத்துவத்தை விரும்பிப் பயிற்றுகின்றதொரு தலைவராகவும், தொண்டராகவும் செயற்பட்டமையை அன்னாரில் நாம் காணக் கிடைத்தது.

அரசியல் பிரவேசத்திற்கு முன்பும், பின்பும் ஊடகவியலாளர்களை மதித்து, நேசித்து அவர்களுடனான தனது உறவைப் பேணி நெருக்கமாக்கித் தன்னுடன் சேர்த்துப் பயணித்துக் கொள்ளும் சிறந்த அரசியல்வாதியும் இவர்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் மாவட்ட ஆலோசகருமாக விளங்கிய முன்னாள் பொத்துவில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்கள் 2015-01-09ஆம் திகதி எம்மை விட்டும் பிரிந்தார்.

அன்னார் மறைந்து இன்றுடன் ஏழு (07) வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் அவரை நாம் ஞாபகப்படுத்தி அன்னாருக்காக துஆப் பிரார்த்தனை புரிவதோடு, ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தின் சுகம் கிடைக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.



மறைந்தாலும் மறக்கப்பட முடியாதவர் முன்னாள் எம்.பி எம்.ஐ.உதுமாலெப்பை மறைந்தாலும் மறக்கப்பட முடியாதவர் முன்னாள் எம்.பி எம்.ஐ.உதுமாலெப்பை Reviewed by Editor on January 09, 2022 Rating: 5