இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தரிக் அஹமட் அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (18) செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையுடன் தற்போது காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் மூன்று தினங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.

உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு நல்குதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி துறையின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்று பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு Reviewed by Editor on January 19, 2022 Rating: 5