ஒபே செப சனீப கொஹொமத" என்னால் எப்படிக் கேட்க முடிந்தது?

(என். முஹம்மது சப்னாஸ்)

"எழில் கொஞ்சும் முல்லைத்தீவில் ஓர் அழகிய கிராமமே எங்கள் உடையார்கட்டு கிராமமாகும். மழலைப் பருவமதை மறந்தவர் எவரும் இரார். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? மழலை தமிழ் பேதி மண்வாசம் மறவாத ஊரிலே நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததும்,விளையாடியதும், பாடல் படித்ததும் மறக்கக் கூடியவையா என்ன? எத்துனை அழகான நாட்கள் அவை. இன்றும் கூட நெஞ்சத் திரையில் நிழலாடுகின்றன.
சிறு பராயத்தில் எத்தனை நாட்கள் பாடசாலை சென்றிருந்தாலும எத்தனை பாடசாலைகளில் கல்வி கற்றிருந்தாலும் எத்தனை நண்பர்கள் கிடைத்திருந்தாலும் பாடசாலை சென்ற முதல் நாள் அனுபவத்தையோ, முதல் பாடசாலையோ முதலில் கிடைத்த நண்பர்களையோ என்றும் மறப்பதியலாது.நானும் அப்படித்தான்.
எனது முதல் பாடசாலையின் பெயர் ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை. எங்கள் ஊரில் தான் உள்ளது. நான் முதன் முதலில் பார்த்து வியந்த இடம் அதுதான். எனக்கு முதலில் நண்பர்களை தேடித் தந்த இடம். ஒரு மனிதனிற்கு வாழ் நாளில் எவ்வளவு நண்பர்கள் கிடைத்தாலும் முதலில் பார்த்துப் பேசிப் பழகிய நண்பர்களுக்கு எவரும் ஈடாக மாட்டார்கள்.

பொதுவாக சிறார்களுக்கு நண்பர்களுடன் ஒன்றாக சாப்பிட்ட, ஒன்றாக விளையாடிய, படித்த அனுபவங்கள் தான் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை எவரும் பெற்றிருக்க முடியாது.
அம்மாவின் திட்டுக்கும் ஆசிரியரின் கொட்டுக்கும் பயப்பட வேண்டிய வயதில் குண்டு வெடிக்கும் சத்தத்திற்கும் அதில் சிக்கி அழும் குழந்தைகளின் நிலைகளையும் எண்ணிப் பயப்பட்ட துரதிஷ்டசாலிகள் நாங்கள்!
நண்பர்களோடு ஒழிந்து விளையாட வேண்டிய வயதில் குண்டு வீசல்களுக்கு பயந்து நண்பர்களோடு சேர்ந்து பங்கர்களில் ஒழிந்து கொண்ட அதிஷ்டமற்றவர்கள் நாங்கள்! ஆம்,சிவில் யுத்தத்தால் எமது நாடு அழிந்து கொண்டிருந்த காலத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள் நாங்கள்.
இவ்வாறு எவ்வளவோ துன்பங்கள் இருந்தாலும் கை கொடுக்க நண்பன் எனும் உறவு இருந்தது.

ஆனால் அவ்வாறு தோள் கொடுத்த நண்பர்களையும் இழந்த அவலம் எனது 10 வயதில் எனக்கு ஏற்பட்டது. அந்த வயதில் உற்ற நண்பர்களை இழக்க நேரிட்டால் அதற்கு காரணமானவற்றின்மீது ஏற்படும் தீராத கோபமும் என்னுடன் சேர்ந்தே வளர்ந்தது.”
இதை ஒரு புனைவுக் கதை என்றா நினைத்தீர்கள். இல்லை!
இது எமது நாட்டில் கடந்த தசாப்தங்களில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிய  ஒருவரின் வாழ்க்கை அனுபவம்! ஒரு தனிநபரின் உன்னதமான கதை!
அப்போது நாங்கள் தரம் 5 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்தோம். உள்நாட்டு யுத்தம் உக்கிரமம் அடைந்து கொண்டிருந்தது. ஆட்கள் காணாமற் போதலும், கண்முன்னே உறவுகளின் இறப்பும், உடைமைகள் அழிக்கப்பட்டு நிர்க்கதியான காலம் அது.  2009ஆம் ஆண்டளவில் யுத்தம் முடிவுக்கு வந்தது. எனது நண்பர்களின் நட்பும் முடிவுக்கு வரும் என நான் நினைத்து பார்த்தேயில்லை.  அன்றைய இறுதி யுத்தத்தில் என்னுடன் தரம் ஐந்து வரை கல்வி கற்ற எனது உற்ற  நண்பர்கள் மூவர் இல்லாது போயினர். நான் கனவிலும் விரும்பியிராத இந்த விடயம் எனது வாழ்வில் ஏற்பட்டதற்கு முழுக் காரணமும் இந்த பெரும்பான்மை சமூகம் என்பது மட்டுமே என் மனதில்  உறுதியாகப் பதிந்திருந்தது.

எனது நண்பர்களின் இழப்பும் எனது சமூகம் அடைந்த துயருக்கும் காரணமாக இருந்தவர்களுடன் எக்காலத்திலும் தொடர்பு கொள்ளக் கூடாது எனும் தீர்க்கமான முடிவை என்னளவில் எடுத்துக் கொண்டேன்.” என தனது அனுபவங்களை விபரித்துக்கொண்டிருந்தார் அணிநிலவன். இவர் முல்லை தீவைச் சேர்ந்தவர். ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின்  வடமாகண ஒருங்கிணைப்பாளராகவும் SYLC எனும் இளைஞர்களுக்கான நிறுவனம் ஒன்றையும் நடாத்திச் செல்கிறார். இவர் அரசியல் சம்பந்தமான விவகாரங்களிலும் சிறுபான்மையினரின் சுதந்திரத்திற்காக , உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவராகவும் அவரது பதினாறாம் வயதின்  ஆரம்பத்தில் இருந்தே முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். ஆனாலும் இவர் பெரும்பான்மை இனத்தவர்களோடு பழகவும் பேசவும் விருப்பம் இல்லாத ஒருவராக இருந்த படியால் ஆரம்பத்தில் இனம் சார்ந்து தனித்து செயல்படக் கூடியவராகவே இருந்திருக்கின்றார். பெரும்பான்மை மக்களால் எமது உணர்வுகளை என்றும் புரிந்து கொள்ள முடியாது என்பதை இவரின் சிறு வயது  அனுபவம் இவருக்கு ஞாபகம் ஊட்டிய வண்ணமே இருந்துள்ளது.இவ்வாறான எண்ணங்களைக் கொண்டிருந்த அனி நிலவன் "ஒபே செப சனீப கொஹொமத" என்று கேட்கும் அளவிற்கு மாறியது எப்படி?

'எதிர் கால தலைவர்கவுகளுக்கான மாநாடு' என்ற தலைப்பில் அனைத்து மொழி, இன இளைஞர்களும் ஒன்று கூடி ஒரே இடத்தில் சில நாட்கள் தங்கவைக்கப்பட்டனர். அவ்வாறு தங்கியவர்களில்  அணிநிலவனும் ஒருவர். ஆனாலும் சிங்கள நண்பர்களுடன் கதைப்பதைத் திட்டமிட்டே தவிர்த்து வந்தார். அவருக்கு மொழியும் புரியவில்லை, வெறுப்பும் சேர்ந்து அவரை எட்டவே நிற்கவைத்தது. அது பற்றி அவர்குறிப்பிடுகையில்,

 “அந் நிகழ்வில் முதல் நாள் நிகழ்வாக ஒரு கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த போட்டியில் எதிரணியில் 'சவிந்த' என்ற பெயரையுடைய ஒரு சிங்களவர் தலைவராக இருந்தார். அந்தப் போட்டியில் அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு சிங்களவர்கள் மீதிருந்த கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே இருந்தது. அவர் என்னை அவருடைய எதிரியை பார்ப்பது போன்றே பார்த்தார்.நான் விளையாடும் போது கத்திக் கூச்சலிட்டு என்னை குழப்ப முயன்றார். நான் ஒரு சிறுபான்மையினத்தவர் என்பதனாலேயே சவிந்த இவ்வாறு நடந்து கொண்டார், என எனக்குத் தோன்றியது.
மறுநாள் எமக்கு ஒரு குறுந்திரைப்படம் எடுக்கும் குழு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது குழுக்களாக இணைந்து ஒரு கதையை எழுதி அதை குறுந்திரைப்படமாக எடுக்கும் ஒரு குழுப்போட்டி.இதன் போது
சவிந்த இருந்த குழுவிலேயே என்னையும் இணைத்து விட்டார்கள். இச் சந்தர்ப்பத்தில் சவிந்த மிக சினேக பூர்வமாக என்னை அணுகினார்.  எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எங்கள் குழு வெற்றி பெறவேண்டும் என்பதற்காக எல்லோருடனும் நல்லமுறையில்  பழகினார். அதே சந்தர்ப்பத்தில் எங்கள் எதிரணியை சேர்ந்த சிங்களவர்களை பார்த்து முறைப்பதும் அவர்களுடன் கோபமாக நடந்து கொள்வதுமாக இருந்தார். அப்போது தான் எனக்கு புரிந்தது அவர் நேற்று என்னுடன் நடந்து கொண்டதும் இன்று எங்கள் எதிரணி சிங்களவர்களுடன் நடந்து கொள்வதும் எங்கள் மீதுள்ள வெறுப்பினால் அல்ல.போட்டித் தன்மையிலேயே என்பது.

சவிந்த என்னுடன் முதலில் பேசிய வார்த்தை 'ஒப சப சனீப கொஹொமத ' என்பதாகும். இவ் வாக்கியத்தை சவிந்தவிடம் இருந்துதான் நான் முதலில் கற்றுக் கொண்டேன். இப்போதும் எந்த சிங்கள நண்பர்களைக் கண்டாலும் நான் கதைக்கும் முதல் வார்த்தையும் அதுதான்.” என்று கூறும் அனிநிலவன்
இவ்வாறான வாய்ப்பைப் பெற்றது ‘இலங்கை ஒன்று கூடுவோம் அமைப்பின்’ செயற்திட்டத்தினால்தான் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.  

இலங்கை ஒன்றுக்கூடுவோம்   அமைப்பானது இலங்கையில் இன, மத, சமூக-பொருளாதார மற்றும் பிராந்திய ரீதியில் இளைஞர்களுக்கு இணைந்து உரையாற்றும் ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவையில் உதித்ததாகும்.
அதன்படி  2007 இல் இது தொடங்கப்பட்டது.
இவ்வாறு ஆரம்பமான இவரது பெரும்பான்மை இனத்தவர்களுடனான தொடர்பு காலத்தோடு வளர்ந்து கொண்டே சென்றுள்ளது. மற்றுமொரு  முக்கியமான சிங்கள நண்பர் உள்ளார் என்றும் அந்த நட்புறவு அவருக்கு பல சுவாரஷ்யமான அனுபவங்களைத்தந்து தன்னை ஒரு இலங்கையனாக மாற்றியது என்றும்  அனிநிலவன் கூறுகிறார்.

மேலும் அனி நிலவன்  குறிப்பிடுகையில்
“ஒரு முறை எனக்கு தென் மாகாணத்தில் வேலையின் நிமிர்த்தம் சில காலம் தங்கி இருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.  நான் மிகவும் கவலை பட்டேன் தெரியாத இடம் ,தனிய வாடகைக்கு இருக்க வேண்டும், புதிய இடம், சிங்கள மக்களுடன் வாழவேண்டும் என பல பீதியுடன் காணப்பட்டேன் அப்பொழுது தான் எனது சிங்கள நண்பர் லக்மல் சந்தீப என்னை அவருடன் தாங்குமாறு அழைத்தார். இன்னொரு நபரின் வீட்டில் சில காலம் தாங்குவது என்பது எனக்கும் புதிய ஒரு விடயம். அத்துடன்  ஒரு சிங்கள நண்பரின் வீட்டில் தாங்குவது என்பதும் எனக்கு  ஒரு  கூச்ச உணர்வைத்த தந்தது. அவர் எனக்கு நண்பர்தான் ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் என்ன எண்ணுவார்கள் என்பதும் மதம், கலாசாரம், மொழி என எல்லாமே என்னை அந்நியப்படுத்தியது.
இச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் லக்மல் சந்தீபவின் குடும்பத்தவர்களுடன் பௌத்த விகாரைக்கும் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதுவரை காலமும் செல்லாத இடம். தயக்கம் இல்லாமல் இல்லை இருப்பினும் இதுவும் ஒரு புது அனுபவம் என்ற எண்ணத்துடனேயே நான் சென்றேன். ஆனால் அன்றைய தினம் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறும் என நான் கொஞ்சமும் எண்ணவில்லை.

அன்று அவ்விகாரையில் 'பிரித்' ஓதும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.
எல்லோரும் குடும்ப சகிதம் உட்கார்ந்து பிரித் நூல் ஓதிக் கொண்டிருந்தனர். அந்த நூலை அவர்கள் குடும்பம் சகிதமாக பிடிப்பது வழக்கம் என ஒருமுறை நண்பரின் அம்மா கூறியது நினைவு வந்ததால் நான் அந்நியனாக ஒதுங்கி நின்றேன்.
"அனி அனி" என்று(எனது நண்பரின் வீட்டில் எல்லோரும் செல்லமாக என்னை அனி என்றே அழைப்பார்கள் )கீழே பார்த்தேன் எனது நண்பனின் அம்மா என்னையும் நூலை பிடித்துக்கொண்டு அமருமாறு கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் ஒரு விருந்தாளி நான் எவ்வாறு அந்த நூலை பிடிப்பேன் அது அவர்களது குடும்ப சகிதம் பிடிக்க வேண்டிய நூல் குடும்ப சகிதமாக பிரார்த்தனை செய்ய வேண்டிய நிகழ்வு.... செய்வதறியாது நின்றேன் ‘அம்மா ‘ என் கையை பிடித்து அருகில் அமர வைத்தார். மன்னிக்கவும் எனது நண்பரின் அம்மா!...  என்ன சொல்லவது அவர் அவ்வாறு செய்த பின் அவர் எனக்கும் அம்மாதானே அதனால்தான்  அம்மா! என்றே கூறிவிட்டேன். இந்த வைபவத்தில், என் நண்பரின் குடும்பத்தவர்கள் என்னையும் அவர்களுடன் உட்கார வைத்து அவரது சம்பிரதாயங்களை எனக்கும் கற்றுத்தந்தமை என்னால் இன்னும் மறக்க இயலாது.

எனக்கு உணவு பரிமாறுவதில் இருந்து என்னுடன் அளவளாவுவது வரை அவர்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்தே செய்தனர்.  பௌத்த இனத்தவர்கள் தொடர்பாக நான் கொண்டிருந்த அனைத்து தப்பெண்ணங்களும் அந்த நொடியில் காணாமற் போயின.” என்றார் கண்கள் பனிக்க.
இனம்,மொழி,சமயம்,சிறுபான்மை,பெரும்பான்மை என்பவற்றிற்கு அப்பால் எல்லோரிடத்திலும் மனித நேயம் ஒன்று உள்ளது. அது மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. யார் மனித நேயத்தை இழக்கின்றாரோ அவர் சமூக அழிவிற்கு காரணமாகின்றார். இது தனிப்பட்ட மனிதர்களில் ஏற்படும் பிரச்சினை. இதற்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் இனத்தையும் குறை கூறுவது பிழையான ஒரு விடயமாகும். நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் போது அப் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களை இன ரீதியிலான கண்ணோட்டத்தில் நோக்குவது ஆரோக்கியமான சமூகத்தை, தனி மனிதனை கட்டியெழுப்ப துணை புரியாது என்பதை தான் நன்கு உணர்ந்துள்ளதாக அனிநிலவன் கூறுகிறார்.

“எனது வீடு, எனது இனம், எனது மொழி என பிரித்து பார்த்தது போதும்! "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு இணங்க எமது நாட்டை எமது வீடாகவும் எமது நாட்டு மக்களை எமது உறவாகவும் கொள்ள வேண்டும். மாற்றம் வேண்டும்!, நல்லிணக்கம் வேண்டும்!, என எவ்வளவு உரக்க கத்தினாலும் எம்மளவில் நாம் மாறாத வரை எமது நாடும் மக்களும் மாற மாட்டார்கள். ஒவ்வொரு தனி நபரும்  தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வருவார்களானால் எதிர் காலத்தில் சுபீட்சமும் நல்லிணக்கமும் கொண்ட இலங்கை திருநாட்டை கட்டி எழுப்ப முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.” என்பதும் அனிநிலவன்  அசையாத நம்பிக்கை. இது அவரது நம்பிக்கை மட்டுமல்ல ஒவ்வோரு இலங்கையரது நம்பிக்கையாகவும் இது மாறவேண்டும்!



ஒபே செப சனீப கொஹொமத" என்னால் எப்படிக் கேட்க முடிந்தது? ஒபே செப சனீப கொஹொமத" என்னால் எப்படிக் கேட்க முடிந்தது? Reviewed by Editor on January 17, 2022 Rating: 5