பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொடிய டெங்கை ஒழிக்க முடியாது - டாக்டர் காதர்

 (றிஸ்வான் சாலிஹு)

எமது பிரதேசத்தில் நாளுக்கு நாள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவலைத்தொடர்ந்து தற்போது டெங்கின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. இதனை முற்று முழுதாக இல்லாமல் ஆக்குவதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமல் கொடிய டெங்கை ஒழிக்க முடியாது என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (16) மாலை அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ சபை ஏற்பாடு செய்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையில் டாக்டர் காதர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,

அக்கரைப்பற்று மாநகரம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தற்போது முடியுமான வரை எமது காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக இப்பிரதேசத்தில் இருந்த சீரற்ற கால நிலையின் காரணமாக மழை நீர் தேங்கி நின்று பல்வேறு பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகியுள்ளது. அவ்வாறான இடங்களை அடையாளம் கண்டு
பொதுமக்களுக்கு  விழிப்பூட்டும் நிகழ்வுகளும், களப்பரிசோதனைகளையும் நாம் செய்து வருகின்றோம்.

டெங்கு தாக்கத்தின் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது நாளுக்கு நாள் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து செல்கின்றார்கள். இதில் பெரியவர்கள், வயோதிபர்கள், இளைஞர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றார்கள்.

இதனால் டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கைகளும் அதிகாரிகளால் விடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முழுமையாக இதிலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு குடும்ப தலைவனும் தன்னுடைய வீட்டை மற்றும் வெற்றுக் காணிகளை சுத்தமாக வைத்திருந்தால் மாத்திரமே இதனை கட்டுப்படுத்த முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கொரோனா பரவலிருந்து எமது  பிரதேசத்தை எவ்வளவு தூரம் விரட்டியடிக்க அரச நிறுவனத் தலைவர்கள், அனர்த்த முகாமைத்துவ சபை, தனியார் நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், இளைஞர்களின் அமைப்புகள், பொது நிறுவனங்கள், இளைஞர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சுகாதார துறையோடு இணைந்து செயற்பட்டீர்களோ, அதனை விட இன்னும் அதிகமாக முயற்சி செய்து கொடிய டெங்கை ஒழிக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்று டாக்டர் காதர் தெரிவித்தார்.





பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொடிய டெங்கை ஒழிக்க முடியாது - டாக்டர் காதர் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொடிய டெங்கை ஒழிக்க முடியாது - டாக்டர் காதர் Reviewed by Editor on January 17, 2022 Rating: 5