நிந்தவூர் கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலையை நவீனமயப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை - ஆணையாளர் அஸ்மி தெரிவிப்பு

(ஏ.எல்.றியாஸ்)

அரசாங்கத்தின் தேசிய கொள்கை வேலைத்திட்டத்திற்கமைவாக கூட்டுறவுச் சங்கங்களினூடாக உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நெல் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலையை நவீனமயப்படுத்துவதற்கு திட்டமிட்டு, அதுதொடர்பான கோரிக்கையொன்றினை கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்துள்ளதாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்திற்கான கோப் பிறஷ் பல்பொருள் விற்பனை நிலையம் நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கக்கட்டிடத்தில் திங்கட்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கில் 16 கோப் பிறஷ் பல்பொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டத்திற்கமைவாக எட்டாவது கோப் பிறஷ் விற்பனை நிலையம் நிந்தவூர் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அதன் எரிபொருள் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக கூட்டுறவு நிதியிலிருந்து ஒரு மில்லியனை ரூபா நிதியினை வழங்கி அதன் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

தேசிய கொள்கை திட்டத்திற்கமைவாக கூட்டுறவுச் சங்கங்களினூடாக உற்பத்திகளை ஆரம்பிப்பதே எமது இலக்காகும். நிந்தவூர் பிரதேசம் நெல் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலையை நவீனமயப்படுத்தும் கோரிக்கையினை கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிந்தவூர்  பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஓய்வுநிலை தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ. சஹீத் அஹமட் தலைமையில் இடம்பெற்ற, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாகவும், கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல் விசேட அதிதியாகயாகவும், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







நிந்தவூர் கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலையை நவீனமயப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை - ஆணையாளர் அஸ்மி தெரிவிப்பு நிந்தவூர் கூட்டுறவுச் சங்கத்தின் அரிசி ஆலையை நவீனமயப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை - ஆணையாளர் அஸ்மி தெரிவிப்பு Reviewed by Admin Ceylon East on January 25, 2022 Rating: 5