தமிழ் பேசும் கட்சிகளின் ஆவணம் பகிரங்கப்படுத்தப்படாமல் விட்டால் மக்களின் பேரணி வீதிக்கு இறங்குவதை தவிர்க்க முடியாது - எஸ்.எம். சபீஸ்

தமிழ் கட்சிகள் சில இணைந்து இந்தியப்பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதம் ஏன் அனுப்பப்படுகின்றது? அந்த கடிதத்தில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பில் வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனை தெளிவுபடுத்தவேண்டியது இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட முஸ்லிங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பெரிய பங்குள்ளது. இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிங்களின் அபிலாஷைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். 

ஒழித்து மறைத்து செய்யப்படும் இந்த ஆவணத்தில் கூட முஸ்லிங்களின் இருப்புக்கு ஆபத்தான விடயங்கள் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இந்த கடிதத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் மக்களின் பிரதிநிதிகளுக்கோ அல்லது சமூக தலைவர்களுக்கோ தெளிவுபடுத்தப்படவில்லை என்பது மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கியுள்ளது என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்ப தயாரிக்கும் ஆவணங்களில் கிழக்கு மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்த ஆவணத்தில் முஸ்லிங்களுக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் "கிழக்கு கேடயம்" ஊடக மாநாட்டை செவ்வாய்க்கிழமை (04) மாலை கல்முனையில் நடத்தினர். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் 

இது தொடர்பில் பூரண விளக்கம் தராமல், எங்களுக்கு விளங்கப்படுத்தாமல் இந்த ஆவண நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டால் கிழக்கில் வாழும் முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுடன் இணைந்ததாக மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றாக வரவழைத்து எந்த நாடுகளுக்கு எல்லாம் இந்த ஆவணம் செல்கிறதோ அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பேரணியை நடத்தி இந்த ஒப்பந்தத்தை மக்கள் நிராகரிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கும் தேவை வந்துவிடும் என்பதை இதில் சம்பந்தப்பட்டுள்ள தலைமைகளுக்கு தெரிவித்து கொள்கிறோம் என்றார்.



தமிழ் பேசும் கட்சிகளின் ஆவணம் பகிரங்கப்படுத்தப்படாமல் விட்டால் மக்களின் பேரணி வீதிக்கு இறங்குவதை தவிர்க்க முடியாது - எஸ்.எம். சபீஸ் தமிழ் பேசும் கட்சிகளின் ஆவணம் பகிரங்கப்படுத்தப்படாமல் விட்டால் மக்களின் பேரணி வீதிக்கு இறங்குவதை தவிர்க்க முடியாது - எஸ்.எம். சபீஸ் Reviewed by Editor on January 05, 2022 Rating: 5