ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் - அதாஉல்லா எம்.பி

பயங்கரவாதம்  ஒழிக்கப்பட்டது போன்று  இனவாதமும் ஒழிக்கப்படல் வேண்டும் என தேசிய காங்கிரசின் தலைவர்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல். எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேசிய காங்கிரசின் 18 ஆவது பேராளர் மாநாட்டில், பேராளர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் அவர் தனதுரையில்,

கடந்த 30 ஆண்டுகளாக தலைவிரித்தாடிய புலி பங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு நிம்மதியை பெற்றுத்தந்த தலைவராக மஹிந்த ராஜபக்ச அவர்கள் திகழ்கின்றார்கள். முஸ்லிம் மக்கள் உட்பட ஏனையவர்களும் புலியங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டார்கள். வரலாற்றில் முஸ்லிம்கள் நன்றி கெட்டவர்கள் என்ற அவப்பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக தேர்தல்களில் தேசியகாங்கிரஸ் தீர்க்கமான முடிவுகளை எடுத்தது.

இன்று இந்த நாட்டில் இனவாதம் கோரத்தாண்டவமாடுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இனவாதம் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் இன்று அது கூர்மையடைந்து இனநெருக்கடிகளை ஏற்படுத்தி அரசியல் செய்கின்ற கலாசாரம் உருவாகியுள்ளது. அவரவர் தத்தமது மத விழுமியங்களை சுதந்திரமாக பின்பற்றி ஏனையவர்களையும் அரவணைத்து வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

என்றுமில்லாதவாறு முஸ்லிம் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் எனும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்காதவர்கள் முஸ்லிம்கள். 

ஆனால் இந்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு சஹ்ரான் போன்றவர்களை பாவித்து உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ உள்ளவர்கள் தமது அரசியல் இலக்கினை அடைந்து கொள்வதற்கும் நாட்டை கையகப்படுத்துவதற்கும் செய்த சதி என பரவலாக பேசப்படுகின்றது.

எனவே இதன் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதனை அரசாங்கம் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வரலாற்றிற்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் - அதாஉல்லா எம்.பி ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் - அதாஉல்லா எம்.பி Reviewed by Editor on February 28, 2022 Rating: 5