(றிஸ்வான் சாலிஹு)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக பதிவாளரும், இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பதிவாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த அல்-ஹாஜ் ஏ.எல்.ஜஃபர் ஸாதீக் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் இன்று (10) வியாழக்கிழமை கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 14 ஆவது பொது பட்டமளிப்பு நிகழ்வின் நான்காவது நாளின் போதே இக்கௌரவம், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழக உபவேந்தரோடு இணைந்து ஒரு நிறுவனத்திற்குரிய ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்து, அதன் முழுமையான செயற்பாட்டுக்கு அத்திவாரம் இட்டவர்களில் ஜஃபர் ஸாதீக் முதன்மையானவராவார்.
கிழக்கு பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல வருடங்கள் பதிவாளராக கடமையாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுச் சென்ற ஜஃபர் ஸாதீக் அவர்களை கெளரவித்தே இப்பட்டம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.