அனுமதி வழங்கப்படாத காணிப்பிரச்சினைகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ண அனுமதி வழங்கப்படாத காணிப்பிரச்சினைகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக மற்றுமொரு கலந்துரையாடல்  அம்பாறையில் நடைபெற்றது.

இம்மாவட்டத்தின் தீர்க்கப் படாமல் கிடப்பில் இருக்கும் பொத்துவில் - லாகுகலை எல்லைப்பிரச்சனை சம்பந்தமான தீர்வினை எட்டும் முகமாகவும் ஏனைய காணிப்பிணக்குகள் தொடர்பாகவும் செவ்வாய்க்கிழமை (15) அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் நிகழ்வொன்று மாவட்ட செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இச்சந்திப்பில், அம்பாறை மாவட்ட செயலாளர் திரு.டக்ளஸ், கௌரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ திரு. வீரசிங்க, கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப், கௌரவ திலக் ராஜபக்ஷ மற்றும் பிரதேச செயலாளர்கள், நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் பொத்துவில் - லாகுகலை எல்லைப்பிரச்சனை குறித்து ஆழமாக ஆராயப்பட்டது. இதன்போது முஷாரப் எம்.பி அவர்கள் எல்லைகளுக்கிடைப்பட்ட பிரச்சினை குறித்தும் தொழில்நுட்ப ரீதியான பிணக்குகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதோடு, பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருவன் அநுருத்த அவர்களும் நிர்வாக ரீதியான விளக்கங்களை வழங்கினார்.

நிலஅளவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களை அழைத்து மற்றுமொரு கலந்துரையாடல் செய்து இறுதி தீர்மானங்களை மேற்கொள்வதாகவும்  முடிவு செய்யப்பட்டது.

அத்தோடு,-பொத்துவில் கிரான்கோவை காணி சம்பந்தமாகவும், அக்கரைப்பற்று வட்டமடு காணியை செய்கை பண்ண விடுவிக்கப்படுதல் குறித்தும் முஷாரப் எம்.பி அவர்களால் ஆவணங்கள் முன்வைக்கப்பட்டு தெளிவு படுத்தப்பட்டதுடன், மிகவிரைவில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை நிகழ்த்திவிட்டு, களவிஜயம் மேற்கொண்டு அவற்றுக்கான தீர்வும் மிகவிரைவில் வழங்கப்படும் என்ற தீர்மானமும் எட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 





அனுமதி வழங்கப்படாத காணிப்பிரச்சினைகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு அனுமதி வழங்கப்படாத காணிப்பிரச்சினைகள் மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு Reviewed by Editor on February 16, 2022 Rating: 5