சிறுதொழிற்றுறை வல்லுநர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள்

நாட்டுக்கு புத்துயிர் அளிக்கும் தொழிற்றுறை மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளில், கைத்தொழில் துறைசார் வல்லுநர்களைக் கௌரவிக்கும் தேசிய கைத்தொழில் சிறப்பு விருது விழா நேற்று (15) புதன்கிழமை பிற்பகல், பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் விடுதியில் நடைபெற்றது. 

சிறப்புமிக்க சிறு, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில் உற்பத்திகள் மற்றும் சிறப்புமிக்க இயந்திர உற்பத்திகள் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த விருது விழாவின் போது ‘பிளாட்டினம்’ விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். 

பாரிய, நடுத்தர மற்றும் சிறு அளவிலான 20 துறைகளுக்கு - தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன. 

மோட்டார் வாகனங்களை ஒன்றுசேர்க்கும் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில், அந்த துறையைச் சேர்ந்த கைத்தொழில் வல்லுநர்கள் மூவர் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூன்று ஆகியோர் இதன்போது சிறப்புப் பாராட்டுக்கான விருதுகளைப் பெற்றனர். 

“நமது உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பயணத்தின் மீது நம்பிக்கை வைத்தே, ஜனாதிபதி அவர்கள் அதிகாரத்துக்குக் கொண்டுவரப்பட்டார்” என்றும், “எதிர்காலத்திலும் அந்த நம்பிக்கையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து, தேசிய கைத்தொழிற்றுறையை மேம்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது” என்றும் தெரிவித்த கைத்தொழிற்றுறை அமைச்சர் விமல் வீரவங்ச, “தேசிய  கைத்தொழில்கள், முன்னரை விட தற்காலத்தில் புத்துயிர் பெற்று வருகின்றன”என்பதனையும் தெரிவித்தார்.

“தேசிய கைத்தொழிலாளர்களுக்கு, தற்போதைய சவால்கள் நிறைந்த நிலைமை ஓர் ஆசீர்வாதமாக அமைந்துள்ளது” என்றும், “தொழில் முயற்சிகள் கட்டியெழுப்பப்படும் போது தேசிய கைத்தொழில்கள் மேம்படுவதால் கிடைக்கும்  பொருளாதாரத்திலிருந்து அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடியதாக இருக்கும்” எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

இலங்கையின் கைத்தொழிற்றுறையை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தலை நோக்காகக் கொண்டு, கைத்தொழில் அமைச்சின் அனுசரணையில் இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்படுகின்றது. 

நாட்டின் ஒன்பது மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவு செய்வதற்காக இடம்பெறும் ஒரு போட்டியின் ஊடாக விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மற்றும் “கைத்தொழில் இலங்கை – 2022” தேசிய கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் முன்வைக்கப்பட்ட வடிவமைப்புகளில் தெரிவு செய்யப்பட்ட 117 சிறந்த படைப்புகள் என்பனவும் விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

அமைச்சின் செயலாளர் தயா ரத்நாயக்க, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் உபசேன திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 







சிறுதொழிற்றுறை வல்லுநர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் சிறுதொழிற்றுறை வல்லுநர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் Reviewed by Editor on February 16, 2022 Rating: 5