(ஏ.எல்.றியாஸ்)
ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ரெபுபாசம், நகர சபை உறுப்பினரான ஏ.எப்.பஜிஹா மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் ஆகியோரின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளது.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.ரெபுபாசம், மற்றும் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட ஏ.எப்.பஜிஹா ஆகியோர் ஏறாவூர் நகர சபைக்கு அக்கட்சியினால் தெரிந்தெடுத்து அனுப்பப்பட்ட உறுப்பினர்களாவர்.
மேற்குறித்த உறுப்பினர்கள் இருவரும், ஏறாவூர் நகர சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியினுடைய தீர்மானத்தினை புறக்கனித்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதனால், சுதந்திரக்கட்சி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களது கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மற்றுமொரு உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் என்பவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டதனால், அக்கட்சி அவருக்கெதிராகவும் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, அவரது உறுப்புரிமையையும் இரத்துச்செய்து கட்சியில் இருந்து வெளியேற்றியது.
இதற்கினங்க, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை போன்றவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்குறித்த உறுப்பினர்களின் பதவிகள் நீக்கப்பட்டமை குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த உறுப்பினர்களின் பதவிகள் காலி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
Reviewed by Editor
on
March 24, 2022
Rating:
