பாழடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு

(றியாஸ் ஆதம்)

பொத்துவில் செங்காமம் பிரதேசத்தில் கைவிடப்பட்டு பாழடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையம் மீளப்புனரமைக்கப்பட்டு மக்கள் சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அப்பகுதி மக்கள் நன்மையடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

செங்காமம் பிரதேசத்தில் கைவிடப்பட்டு பாழடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையம் மீளப்புனரமைக்கப்பட்டு தங்கட்கிழமை (21) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.யூ.அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகெகாண்டு உரையாற்றி போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செங்காமம் மீள்குடியேற்றக் கிராமத்தில் சுகாதார நிலையமொன்று கைவிடப்பட்டு பாழடைந்துள்ள நிலையில் உள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது இதனையடுத்து அப்பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு நிலமைகளைப் பார்வையிட்ட போது குறித்த சுகாதார நிலையக்கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அப்போது அப்பகுதி மக்களும் எங்களைச் சந்தித்து அதனைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்களுடைய நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அதிகமான நிதிகளை செலவு செய்து சுகாதார நிலையத்தினை புனரமைத்து மக்கள் சேவைக்காக கையளித்திருக்கின்றோம். எனவே கடந்த காலங்களைப் போலல்லாது இதனைச் சிறந்த முறையில் பாதுகாப்பது இப்பகுதி மக்களுடைய பொறுப்பாகும். அப்போதுதான் இங்குள்ள மக்கள் இச்சுகாதார நிலையத்தின் ஊடாக நன்மையடைய முடியும் என்றார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹிம், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பளார் டொக்டர் எம்.பி.ஏ.வாஜித், திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர். சுகாதார முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜிப்,  பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப், கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர். டொக்டர் எம்.ஏ.நபீல், சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.மலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 






பாழடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு பாழடைந்த நிலையில் காணப்பட்ட சுகாதார நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு Reviewed by Editor on March 22, 2022 Rating: 5