ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றன - பிள்ளையான் எம்.பி

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான  அரசியல் சூழல் யாவரும் அறிந்ததே. கொழும்பு நிலைமைகளைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே  காணப்படுகின்றன. ஆனால்  அமைச்சரவை மாற்றம் அல்லது தேசிய அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம்  ஒன்றை அமைப்பது பற்றியே  பல்வேறு விதமான முன்னெடுப்புக்கள்  நடைபெற்றுவருகின்றன என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) வெளியிட்டுள்ள தற்கால அரசியல் நிலவரம் தொடர்பிலான அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தற்கால சூழ்நிலையில்  நம் ஒவ்வொருவராலும் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் எமது நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை பொறுப்போடு அணுகுவதாக இருக்கவேண்டும் என்று நான்  கருதுகின்றேன்.  

எனவே எமக்கு வாக்களித்த மக்களை மனதிற்கொண்டு சமூகப்பொறுப்போடும் நிதானமாகவும் நிலைமைகளை நான் கூர்ந்து அவதானித்து வருகின்றேன்.

கிழக்கின் தனித்துவத்துக்கான  கட்சியின் பிரதிநிதி  என்னும் அங்கீகரிப்பின் ஊடாக  எனக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் எமது மக்களால் வழங்கப்பட்ட ஆணை மிகவும் பெறுமதிமிக்கது என்பதை நான் நன்கே உணர்ந்துள்ளேன். 

அந்தவகையில் கிழக்குமாகாணத்தில் வாழும்  தமிழர்களின்  அரசியல் அதிகார சமநிலையை பேணவேண்டிய பாரிய பொறுப்பு எனக்கிருப்பதாக நான் கருதுகின்றேன்.  

எனவே இன்று எமது நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் சிக்கல்களை தாண்டிச்செல்ல எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளிலும் கிழக்குத் தமிழர்களின் அதிகார சமநிலைக்கு பங்கம் ஏற்படாதவாறே  எனது தீர்மானங்கள் அமையும் என்பது உறுதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றன - பிள்ளையான் எம்.பி ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே  காணப்படுகின்றன - பிள்ளையான் எம்.பி Reviewed by Admin Ceylon East on April 06, 2022 Rating: 5