(பாறுக் ஷிஹான்)
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால், கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய மின்சார தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இப்போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
இதன் போது போராட்டகாரர்கள் "நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள், மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள், வினை விதைத்தவன் வினையறுப்பான், குடும்ப ஆட்சி வேண்டாம், மக்கள் ஆட்சியே வேண்டும், காலால் உதைக்காதீர்கள், கைகொடுக்கும் தெய்வமாக மாறுங்கள், மக்கள் சேவை மகேசன் சேவை என அறிந்து கொள்ளுங்கள்" என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
