காலி முகத்திடலை அண்மித்து அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக , கிரிபத்கொட - மாகொல சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று (13) புதன்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க மாகொல சந்தியில் தற்காலிக கொட்டில் அமைத்துக்கொண்டிருந்த களனி பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க உறுப்பினர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.30 மணியளவில் அவ்விடத்துக்கு சென்ற குழுவொன்று இந்த தாக்குதலை நடாத்தியுள்ளது.
இதனால் பல பல்கலைக் கழக மாணவர்கள் காயமடைந்து கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கிரிபத்கொடை பொலிஸார், களனி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் நிலந்த பெரேராவைக் கைது செய்துள்ளனர்.
அவர் தலைமையில் வந்த குழுவே தாக்குதல் நடாத்தியமை தெரியவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ( 14) மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Editor
on
April 14, 2022
Rating:
