அண்மையில் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
எவ்வாறாயினும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், தாக்குதல், காயம், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.
இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 791 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் மேல் மாகாணத்தில் இருந்து 444 முறைப்பாடுகளும், தென் மாகாணத்தில் இருந்து 118 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
(அத தெரண)
 
        Reviewed by Editor
        on 
        
May 17, 2022
 
        Rating: 
 