அநுராதபுரம், இபலோகம பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீடு நேற்றிரவு (21) இனந்தெரியாத ஒரு குழுவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்று அவரது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவான மக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், போதிய எரிபொருள் இல்லாததால், சிலருக்கு எரிபொருளை பெற முடியவில்லை.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் நேற்று இரவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டினுள் இருந்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இரண்டு பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் உட்பட பல சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒரு குழந்தை நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, வன்முறைகள் இடம்பெற்றால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
May 22, 2022
 
        Rating: 
 