உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது - சட்டத்தரணிகள் சங்கம்

ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம்,

 “போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் செய்திகள் உள்ளன. போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் ஆதரிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற போராட்டங்கள் எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோரின் கையொப்பத்தின் கீழ் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் இன்று (04) கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது - சட்டத்தரணிகள் சங்கம் உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது -  சட்டத்தரணிகள் சங்கம் Reviewed by Editor on May 04, 2022 Rating: 5