கோட்டாகோகம, இலங்கையின் வரலாற்றை செதுக்கும் ஒரு போராட்டம்; உலகின் மக்கள் போராட்ட வரலாற்றில் ஒரு புது திருப்பம்...
போராட்டக்காரர்களின் இயல்பு என்னவென்று ஒருவரியில் கூறமுடியுமா என்று என்னைக் கேட்டால் 'ஒருபோதும் செய்து காட்ட அல்லது வெற்றிபெற முடியவே முடியாது' என்று ஒரு சவாலை விடும் போது அதற்கான யதார்த்தத்தைக் கருத்திற்கொள்ளாது அதனை சாத்தியப்படுத்திக் காட்டுவது என்று கூறுவேன்.
மார்ச் 31 இரவு மிரிஹானையில் கோட்டாவுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டமும், அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 400 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள் நுகேகொடை கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜராகியமையும் மக்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் என்று அசைக்கமுடியாத பலத்தைக் கொண்ட இந்த அரசாங்கத்திற்கு எதிராக தங்களாலும் வீதியில் இறங்கிப் போராட முடியும் என்ற உத்வேகத்தை அளிக்க முக்கிய காரணங்களாக அமைந்தன.
ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு நுகேகொடை கங்கொடவில நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த போது பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தொடக்கம் அங்கு வந்திருந்த ஒவ்வொரு சட்டத்தரணியையும் கைகூப்பி வணங்கி, 'நீங்கள் எங்களுடன் இருக்கும் வரை இப்போராட்டத்தை கைவிடமாட்டோம்' என்று கூறுவதைக் கேட்டபோது இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நிச்சியமாக செல்லும் என்ற நம்பிக்கை மனதில் எழுந்தது.
அதன்பிறகு பல பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றாலும் இதன் அடுத்த கட்டம் என்ன என்பது பலரின் சந்தேகமாக இருந்தது. அலரி மாளிகைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் முன்னாள் இரவு 2 மணி 3 மணி வரை போராட்ட சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பினாலும், பல மணி நேர ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கலைந்து செல்லும் ஆர்ப்பாட்டங்களாகவே அவை காணப்பட்டன.
அதன் சில தினங்களின் பின் காலிமுகத்திடலில் ஏப்ரல் 9 ஆம் திகதி துவங்கிய மக்கள் போராட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தாலும் இந்தக்கூட்டம் ஜனாதிபதி பதவி விலகும் வரை நீடிக்கப் போவதில்லை, குறிப்பாக வீடுகளுக்குச் செல்லாமல் போராட்டத்தை தொடரமாட்டார்கள் என்றெல்லாம் அரசாங்க நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் அரசியல் ஆருடம் கூறினர்.
குறிப்பாக இரண்டாம் நாள் காலை கடும் மழை பெய்யும் போது நூறு பேரிற்கும் குறைவானவர்களே எஞ்சிய போது இது முடிந்துவிட்டது என்றார்கள்.
கோட்டாகோகமையின் போராட்டத்தைக் கலைக்க இது 'அரசாங்கத்தின் சதி. இங்கே சொகுசாக மக்களை வைத்துவிட்டு அரசாங்கம் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தமது அஜன்டாவை அமுல்படுத்துகிறது. ஆகவே கோட்டாகோகமையை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபடுங்கள்' என்று ஒரு கதையை போராட்ட ஆதரவாளர்களிடையே பரப்பவிட்டனர்.
ஆனால் அரச, பொலிஸ், ராணுவ மிரட்டல்கள், தாக்குதல்கள், அவசர காலச் சட்டம், ஊரடங்கு, இனவாதப் பிரச்சாரம், தனி மனித வெறுப்புப் பிரச்சாரம் என அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளும் கடைசியில் தோல்வியிலேயே முடிந்தன. இன்னுமொரு வார்த்தையில் கூறினால், இவை அனைத்தையும் தாண்டி கோட்டாவை பதவி விலக வைக்க மக்கள் போராட்டத்தால் முடியும் என்ற அசாத்தியமான நம்பிக்கையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தொடர்கின்றனர். இதன் அங்கமாக பெரும் அரசியல் பலசாலியான மஹிந்தவின் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப முடிந்தது போராட்டத்தின் வெற்றியாகும்.
இவற்றை எல்லாம் தாண்டி, ஒருமாதம் தாண்டியும் ஒருநாள் கூட மின்சாரம் துண்டிக்கப்படாமல், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல், சூழல் மாசடையாமல் போராட்டம் நடைபெறுகிறது. கலைஞர்கள் மிக உச்சகட்ட creative freedom ஐ அனுபவித்து மக்கள் போராட்டத்திற்கு கலைத்துவமாக உயிரூட்டுகிறார்கள். சட்டத்தரணிகள் போராடும் மக்கள் சார்பாக இலவசமாக ஆஜராகின்றார்கள். சட்டம் குறித்த தெளிவுகளை வழங்குகின்றனர். சட்டத்தரணிகளும் சமயத் தலைவர்களும் மக்கள் மீது அரசாங்கம் வன்முறையை ஏவிவிடும் போது மனித சங்கிலிகளை உருவாக்கி மக்களைப் பாதுகாக்கின்றனர். முஸ்லிம்கள் நோன்பு திறப்பது துவக்கம், தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டு, ஈஸ்டர், நோன்புப் பெருநாள் என்று சமயக் கொண்டாட்டங்களில் எந்தவித வேறுபாடும் இல்லாமல் மக்கள் ஈடுபடுகின்றனர். புத்திஜீவிகள் கோட்டாகோகம நூலகத்தையும், கோட்டாகோகம பல்கலைக்கழகத்தையும் திறந்து போராட்டத்தை அறிவுசார் மட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.
இவ்வாறு மாபெரும் ஒரு மக்கள் போராட்டம் எந்தவித அரசியல் கட்சியினதும் தலைமைத்துத்தின் கீழ் நடக்கமால், எல்லாத் தரப்பின் பங்குபற்றுதலோடும் அமைதியான முறையில் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதோடு, உலக மக்கள் போராட்ட வரலாற்றிலும் முக்கிய போராட்டமாக பதிவுசெய்யப்படும் என்பதும் திண்ணம். எமது நாளைய சந்ததியினர் அரசியமைப்பின் 3 ஆவது உறுப்புரையில் கூறப்பட்டுள்ள இலங்கையின் இறையாண்மை மக்களிடமே காணப்படும் என்பதை நடைமுறை ரீதியாக நிகழ்த்திக்காட்டி, தமது எதிர்காலத்திற்காக நடத்திப்பட்ட இப்போராட்டத்தை பெருமையோடு நினைவுகூருவார்கள் என்பதோடு இப்போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு எதிர்காலத்திலும் மக்கள் போராட்டங்களைத் தொடர்வார்கள் என்றும் நம்புகிறேன்.
கடைசியாக தற்போதும் இப்போராட்டம் புதிய காபந்து அரசாங்கத்தின் பதவியேற்பின் பின்னர் நீர்த்துப் போய்விடும் என்று நம்புபவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது ஒரே விடயம் தான். மக்கள் போராட்டம் நிச்சியமாக கோட்டா பதவி விலகும் வரை தொடரும்!
(நன்றி - அர்ஹம் முனீர்)
 
        Reviewed by Editor
        on 
        
May 12, 2022
 
        Rating: 
 