அரசியல் முறைமை மாற்றம் (system change) அவசியமானது - முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் யு.எல்.எம்.என். முபீன்.

(எம்.பஹ்த் ஜுனைட், காத்தான்குடி நிருபர்)

நமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? என்ற அச்சம் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றைய நாட்களில் ஏற்பட்டுள்ளது.

நாளாந்த செய்திகள் எதிர்காலம் பற்றிய அச்சத்தை தொடராக ஏற்படுத்துகின்றன.

உணவுப் பஞ்சம் ஏற்படும் 

பட்டினிச் சாவு வரலாம்.

உணவை பெற்றுக் கொள்ள மக்கள் வன்முறையில் ஈடுபடுவர்.

சுகாதாரத்துறை செயலிழக்கும்  போன்ற  அபாயச் சங்குகள் நாட்டின் பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களால் அடிக்கடி ஊதப்படுகின்றன.

இன்றைய இக்கட்டான நிலமைகளுக்கு சுதந்திரத்தின் பின் இன்று வரை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது  நிரூபணமாகி இருக்கின்றது.

ஜே.ஆர்.அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை , திறந்த பொருளாதார கொள்கை, ஜனாதிபதியின் சட்டத்திற்கு அப்பாட்பட்ட  கேள்விக்குட்படுத்தப்படாத நிலை, வீராப்புடன் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு யுத்தம், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காமை,

ஆட்சியைகைப்பற்ற தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட மதவாத , இனவாத செயல் திட்டங்கள், அரசாட்சி முறையில் நிலவிய ஊழல், மக்களின் பிழையான அரசியல் தெரிவுகள் உள்ளிட்ட பல காரணிகள் இன்றைய இக்கட்டான நிலமைக்கு முழு நாட்டையும் தள்ளி மக்களை நடுத் தெருவில் அலைய விட்டுள்ளது.

1960 ம் ஆண்டுகளில் இலங்கை பொருளாதாரம் ஆசியாவில் ஜப்பானிற்கு அடுத்த நிலையில் இருந்துள்ளது.

1977ல் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். அரசியல்வாதிகளுக்கு சலுகை வழங்கும் நிலமையை ஆரம்பித்து வைத்தார்.

2005 ல் ஜனாதிபதி பதவி ஏற்ற மஹிந்த ராஜபக்ஷ இந்த அரசியல்வாதிகளுக்கு சலுகை வழங்கும் நிலையை மிகத் தீவிரமாக்கியதோடு அரசியல்லாதிகள் முறையற்ற விதத்தில் அரசியல் யாப்பிற்கு முரணாக பணம் உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தனக்கான பாராளுமன்ற பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மஹிந்த இந்தச் சலுகைகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதுடன் இவ் ஊழல் மாகாண சபை ,உள்ளுராட்சி மன்றங்கள் வரை வியாபித்ததுடன் பிரதேச மட்ட அமைப்பாளர்கள் வயிறை நிரப்பும் வழி வகைகளையும் செய்து கொடுத்தது.

2019ல் ஜனாதிபதியாக  கோட்டாபாய ராஜபக்ஷ பதவி ஏற்ற போது  நல்லாட்சி அரசாங்கம் 7.5 பி( B)ல்லியங்களை திறைசேரியில் இருப்பாக வைத்திருந்தது. 

இன்றைய பிரதமர் ரணில் திறைசேரியில் ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை என்கிறார்.

நாடு செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டுக் கடன் 56 பி(B)ல்லியன்.

ஆனால் கோட்டாபாய தன் நண்பர்களுக்கு வழங்கிய வரிச்சலுகையால் நாட்டிற்கு ஏற்பட்ட வருமான இழப்பு 600பி( B)ல்லியன் .

ஆக கோல்பேஸில் தொடங்கிய போராட்டம் Gota go home என்ற கோசத்துடன் அரசியல் முறைமை மாற்றம்( system change )என்ற கோசமாக பரிமாணமடைந்திருக்கிறது. 

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 அம்ச பரிந்துரைகளை முன்வைத்தது.

சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டு நாட்டின் அவசர பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுவதுடன் நிரந்தர அரசியல் மாற்றங்கள் யாப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே அதன் சாரம்சம். 

ஆனால் பிரதமரோ கட்சிகளை உடைத்து அரசாங்கத்தை உருவாக்கி வருகிறார்.

இதற்கு அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சிகள் மறுத்ததை காரணமாக இருக்கலாம்.

இப்போது நடைபெற வேண்டியது என்ன?

 முதலாவது நாட்டு மக்களின் உடனடி உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் முறையான செயல்திட்டத்தை நடைமுறைபடுத்தி அது தொடர்தேர்ச்சியாக கிடைப்பதற்கான ஒழுங்குகளை பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்தல்.இதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் தற்போது ஆரம்பித்துள்ளார்.

இரண்டாவதாக அரசியல் முறைமை மாற்றத்திற்கான (system change) பூர்வாங்க வேலைகளை முன்னெடுத்தல்.

இது ஒரு கடினமான பணி.இப்பணியில் பாராளுமன்றத்தின் பங்கே பிரதானமானது.

ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சரவை, ஆளும் கட்சி,எதிர்கட்சி சிவில் சமூகம் மற்றும் போராட்டக்காரர்கள் இந்த அரசியல் முறைமை மாற்றத்தின் பிரதான பங்குதாரிகள் .

இவர்களின் ஒருமித்த கூட்டுச் செயற்பாடு இங்கு மிக அவசியமானது.

இந்த அரசியல் முறைமை மாற்றம் அரசியல் யாப்பின் ஊடாகவே நடைபெற முடியும். இது ஒரு காலமெடுக்கும் செயன்முறையாகும்.

இதுவே நாட்டிற்கு மிக மிக தேவையான முக்கிய செயன்முறை. சுதந்திரத்தின் பின்னரான அனைத்து முறைகேடுகளுக்கும் இதுவே நிரந்தர தீர்வாக அமையும்.

இவ்விடயத்தில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. இவ் அரசியல் சீர்திருத்தங்களுக்கு தடைபோடும் அல்லது குழப்பும் அரசியல்வாதிகள் மற்றும் சக்திகளை இனங்கண்டு அவர்களை முற்றாக அரசியலில்  இருந்து ஒதுக்கும் பணியினை பொதுமக்கள் செய்ய வேண்டும்.

இவ்விடயத்தில் புத்திஜீவிகள் மட்டத்தில் நிலவும் ஓர் அச்சத்தையும் குறிப்பிட வேண்டும். அதாவது  

மக்களின் உடனடி பிரச்சினைகள் (உணவு,எரிவாயு,எரிபொருள்)  தீர்க்கப்பட்டால் அவர்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி விடுவார்கள். தன்னெழுச்சிப் போராட்டம் வீரியம் இழந்து விட வாய்ப்புள்ளதால்

நாட்டிற்கு மிக அடிப்படை அவசியமான அரசியல் முறை மாற்றம் கைவிடப்படலாம்.  மீண்டும் ஊழல்வாதிகளின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் சென்று விடலாம் என்பதே அவ்அச்சமாகும். 

நமது நாட்டின் உண்மையான சுபீட்சத்திற்கும் நமது எதிர்கால சந்ததிகளின் வளமான எதிர்காலத்திற்கும் அரசியல் முறைமை மாற்றமே(  system  change)மிக அவசியமானது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆசிரியர் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.



அரசியல் முறைமை மாற்றம் (system change) அவசியமானது - முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் யு.எல்.எம்.என். முபீன். அரசியல் முறைமை மாற்றம் (system change)  அவசியமானது - முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் யு.எல்.எம்.என். முபீன். Reviewed by Editor on May 26, 2022 Rating: 5