(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி. கே. மாதவன்)
உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மரம் நடுவோம் சூழலைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில், மர நடுகையும் மற்றும் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நிகழ்வும் அட்டாளைச்சேனை கடற்கரையில் (18) நடைபெற்றது.
பொதுச்சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி அஸாத் எம். ஹனிபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பசுமை சூழலை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பயன்தரும் மரக்கன்றினை அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் நட்டு வைத்தார்.
கரையோரப் பிரதேசங்களைச் சுத்தப்படுத்தல், பசுமையாக்கல் நோக்கில் மரக்கன்றுகள் நட்டுவித்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணியில் சேகரிக்கப்பட்ட வெற்றுப்போத்தல்கள், கண்ணாடிப் போத்தல்கள், அலுமினியம் தகடு, இறப்பர் மூடி,பொலித்தீன்கள் உள்ளிட்ட பொருட்கள் வேறு வேறாக தரம் பிரிக்கப்பட்டு திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்பாட்டிற்காக மீள் சுழற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜுனைதீன், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் யூ.எம்.வாஹிட், தாதிய பரிபாலகர் பி.ரீ.நௌபர், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.